466. குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே. (ப. இ.) உயிர்ப்பு இருவரும் மருவுங் காலத்து வலமூக்கின்வழி வந்துகொண்டிருந்தால் பிறக்கும் மகவு ஆணாகும். அஃது இடது மூக்கின் வழி வந்துகொண்டிருந்தால் பெண்ணாகும். மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். இருமூக்கின் வழியாகவும் ஒத்துவருமானால் பிறப்பது அலியாகும். (31) 467. கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே. (ப. இ.) மருவிப் புணரும் காதலர் இருவருக்கும் வருகின்ற உயிர்ப்பு ஓர் அளவாக வருதல் வேண்டும். அங்ஙனம் ஒத்து எழுந்தால் திருவருளால் கருவுற்றுத் தோன்றும் குழவியும் நனிமிகு வனப்புடையதாகவிருக்கும். வனப்பு - அழகு. அவ் வுயிர்ப்பாகிய மூச்சு தடுமாறுமேயானால் அழகிய வளையலையணிந்த காதலி வயிற்றில் கருத்தங்கியது ஏதும் இல்லையாகும். அந்தோ மூச்சுப் பயிற்சியின்மையானும், மூச்சின் அருமையினை உணராமையானும், காலமும், இடனும், காதலும், கருத்தும் தீதற உணராது காமம் மேலிட்டபொழுதெல்லாம் முறையின்றி மருவி உரனும் இழந்து வரனுடை மக்கட் பேற்றையும் அழித்துவிடுகின்றனர். சிற்றுயிர்களுக்கு உள்ள இயற்கை அடக்கம்தானும் ஆறறிவுயிராகிய நம்மனோர்க்கு அமையாவிடின் ஆன்றோர் என்ன கூறுவர்? எங்ஙனம் மதிப்பர்? சிற்றுயிர்கள்மாட்டு யாண்டேனும் வேண்டும் கருவீணாய் மாண்டதெனக் கண்டதும் கேட்டதும் உண்டோ? இனியேனும் உண்மையுணர்ந்து ஓழுகுவோமாக. (அ. சி.) குழறினால் - தடுமாறினால். (32) 468. கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந் தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம் பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப் போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே. (ப. இ.) அழகிய வளையலணிந்த பெண்களின் உந்தியளவாம் அடி வயிற்றில் கருவுற்றுத் தங்கிய அரும்பெறற் குழந்தையும் அண்ணாக்குத் தொளைவயிற் காணும் பேரொளிப் பிழம்பொக்கும். தால் - நாக்கு; அண்ணாக்கு. வயிற்றில் முறைமுறையாக வளர வேண்டிய வுறுப்புக்கள் அனைத்தும் செவ்வையுற வளர்ந்து பகலவனின் பொன்னுருவாம் தன்மையினை எய்தும். இந் நிலைமையினையே பிள்ளை சிவசூரியன்போல் இருக்கின்றதென்று செப்புவர். எனவே, வயிற்றகத்துச் சேய் சிவந்த உருவாக விளங்கும். பொன்னுரு - காலையே போன்றிலங்கும் பொன்னிறம்.
|