501
 

1276. ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

(ப. இ.) (ஆறு + இருபது + நாலு + ஐந்து) ஆக முப்பத்தைந்தும் தொன்மைத் தமிழ் மெய்யெழுத்துக்களாகும். அவை வேறுருவாக விரியப் பட்டுக் கிடந்தன. அஞ்சையும்-திருவைந்தெழுத்தையும்; அஞ்சு + ஐயும் - ஐந்தெழுத்தையும்; ஐ ஆகிய திருவருள் வித்தெழுத்தையும் . இவைகளை உணர்ந்து இவைகளுக்கு உயிராக விளங்கும் 'சிவயநம' என்னும் தமிழ்மறையினை முறையுறக் கூறுங்கள். கூறினால் எவ்வகைக் குறைகளும் உண்டாகா. இவ்வுண்மையினை அறிபவரில்லை.

(அ. சி.) ஆறு இருபத்துநாலு அஞ்சு - 35 - மெய்கள் . அஞ்சு - பஞ்சாக்கரம். ஐ - சத்தி எழுத்து.

(4)

1277. குறைவதும் இல்லை குரைகழற் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லாருக்கு
இறவில்லை என்றென் றியம்பினர் காணே.

(ப. இ.) சிவயநம எனக் கூறுவார்க்கு எவ்வகைக் குறையும் நேராது. ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடியைக் கூடுதலுமாகும். இவ்வுண்மையினை அறைவதும் மறைநூலாகும். அதனால் மறைநூல் முறைநூலாகிய வேதாகமங்களும் அவ்வைந்தெழுத்தால் ஆவன. இவ்வுண்மையினைத் தெளியவல்லாருக்கு இறப்பில்லை என்று செந்நெறிச் செல்வர்கள் கூறினர். இற : இறத்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.

(5)

1278. காணும் பொருளுங் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்
காணுங் கனகமுங் காரிகை யாமே.1

(ப. இ.) உலகிற் காணப்படும் உலகியற் பொருள்களும், வழிபடு கடவுளும், விரும்பும் நிலைகளும், நீர் நிரம்பிய தீர்த்தமும், உண்ணும் உணவும், உணரும் உணர்வும், உறங்கும் உறக்கமும், கருதப்படும் பொன் முதலிய செல்வங்களும் திருவருள் அம்மையால் கிடைப்பன . அதனால் அவைகளை அம்மை எனவே அன்பால் கூறுவர்.

(6)

1279. ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.


1. பாரவன்காண். அப்பர், 6. 87 - 6.

" நின்னாவார். " 6. 95 - 7.