608
 

1554. உண்மையிற் பொய்ம்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே.

(ப. இ.) சிவகுரு உண்மையாகிய திருவடியுணர்வால் நிலையில்லதாகிய காரறிவாண்மை என்னும் அறியாமையை அகற்றுவன். அகற்றுதலும் காரணத்தின் நிலைபேறுடையதாய திண்மைமிக்க மாயாகாரிய நிலைமையும், இயற்கை உண்மை அறிவு இன்ப ஒண்மைச் சிவனார் அம்மாயையினைக் காரியப்படுத்தி, நாம் பயன்பெறும்படி நமக்குத் தந்தருளிய வண்மையும் புலனாகும். அறுபத்துநான்கு சித்திகளை எய்தும் மயக்கமும் அகலும். இவையனைத்தும் சிவபெருமானாகிய அண்ணலின் திருவருளாலாகும். இவ்வுண்மையினை அறிவார் மிகவும் அரியர்.

(அ. சி.) பொய்ம்மை அஞ்ஞானத்தை. உண்மைப் பார் திண்மையும் - உண்மையாகக் காணப்பட்ட உலகத்தின் மாய வலிமையும். எட்டெட்டு சித்தி மயக்கம் - 64 சித்திகளால் ஆகும் மயக்கமும்.

(7)

1555. சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ1 நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

(ப. இ.) சிவஞானமாகிய முற்றுணர்வைத் தந்தருளும் சிவகுரு சிவஞானியாவர். அவர் சிவனெனவே படுவர். ஆதலால் சிவகுருவை இயற்கை உண்மைச்சிவனே என நினைந்து அவர் திருவடியைச் சேரும் நற்பேறு பெற்றார்க்குத் தூவாமாயையின் காரியமாகிய அவ் வுடலுறுப்புக்கள் தூமாயையின் காரியமாக வேறுபடும். வேறுபடுதல் - சிறப்புறுதல். இதுவே ஈண்டு நவமான தத்துவம் என ஓதப்பட்டுள்ளது. 'உள்ளம் சிவனுடன் ஒன்றாகில் உடலும் அவனுடலாகும் இஃது 'உள்ளநினை வாலுணர்வாம் உற்றுணர்வால் தூய்மையுடல், வள்ளலுடன் அமைப்பன் வந்து' என்னும் முறைமையாலறிக. வழிப்பேறுகளாகிய முத்தியும் கைகூடும். பிறப்பும் அறும். விழுப்பேறாகிய பரலோகம் எனப்படும் வானோர்க்குயர்ந்த உலகமாகிய திருவடிப்பேறும் எய்தும்.

(அ. சி.) பவம் - பிறப்பு.

(8)

1556. குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.

(ப. இ.) நந்தியாகிய முழுமுதற்சிவன், அருள்வீழ்ச்சியால் எழுந்தருளிவந்து ஆட்கொள்ளும் குருவே சிவன் என்று அருளினன். திருவருள் துணையால் குருவே சிவன் என்னும் மெய்ம்மையினைக்


தானெனை. அரூரர், 7. 100 - 1.