613
 

(ப. இ.) சிவகுருவாய் வந்து திருவடி சூட்டியதும் பிறப்பிற் கேதுவாய் உரையும் உணர்வும் அகன்றன. அகலவே, உயிரும் உயிருக்குயிராகிய சிவனும் என்று வேறுபடுத்திப் பேசும் பேச்சும் அற்றது. திரையும் கடலுமாகிய ஒன்றனையே திரையெனவும். கடலெனவும் இரு பெயரால் பேசுகின்றோம். கடல் தெளியாத நிலைமையில், கடல் தெளிந்த இடத்தில் இரண்டு பெயரில்லை. அதுபோல் மேற்கூறிய உயிரும் சிவனும் என்பதாகிய பேச்சு அற்றதாகும். ஆனால் ஆருயிரும் சிவனும் மலர்மணம் போல இயையும் இருபொருள்கள். அதனால் கடல் போல் ஒன்றெனும் பெயர் சிவத்தின்மாட்டு இன்றாகும். ஆனால் புணர்ப்பு என்னும் பெயர் உண்டாகும். எல்லையிலாத நுண் ஓசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசையாகிய நான்மையும் சத்தாதி நான்கு எனப்பட்டன. அவை ஓசை மெய்யாகிய நாதத்தைக் குறிக்கும். அந்நாதத்தைக் கடந்து விளங்குகின்ற சிவ இயற்கையின்கண் ஆருயிர்களாகிய நம்மை நுகர்வித்தருளினன். அதனால் வாய்நிறை உணவினர், நாவால் உரையாட இயலாமைபோல யாமும் பேசாநிலை பெற்றனம் என்க.

(அ. சி.) உயிர் பரமற்று - சீவன் சிவன் என்கிற வேறுபாடின்றி. சொல்லிறந்தோம்-மவுன நிலையடைந்தோம்.

(4)

1568. குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்டு
அரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்று
உருகிட என்னையங் குய்யக்கொண் டானே.

(ப. இ.) சிவகுருவாய் எழுந்தருளும் ஆண்டவன், ஆருயிரினுடைய பருமை நுண்மை முன்மை (காரணம்) என்னும் மூவகை யுடம்புகளையும் இரவலை ஏற்பதுபோன்று தன் உடைமையாக ஆக்குகின்றனன். ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் காணிக்கையாகக் கொள்கின்றனன். சிவபெருமான் திருவடியைப்பெற்ற நந்தியெங் கடவுளர் என்னை உய்யக் கொண்டருளினன். அதனால் உரையற்று உள்ளம் உருகிக் கண்களில் இன்பவெள்ள நீர் பெருகப் பள்ளத்து வெள்ளம்போல் அமைதி ஆக்கினன்.

(அ. சி.) உயிர்முச் சொரூபம் - தூலம், சூக்குமம், காரணம். அரியபொருள் முத்திரையாக - உடல், பொருள், ஆவி மூன்றையும் காணிக்கையாக. பேச்சற்று - மவுன நிலையில் இருந்து.

(5)

1569. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

(ப. இ.) சொல்லவொண்ணாததாகிய திருவடி இன்பப் பெரு வாழ்வில் ஒடுங்கச்செய்து, (மாச்சு : மாய்த்து - ஒடுங்கச்செய்து) உரிமையற்ற அடிமையாகிய என்னைச் சிவமாக்குதலாகிய அப்பாலாக்கலைச் செய்தருளினன். செய்யவே பிணிப்புத்தன்மையாகிய பசுத்துவம் அழியும்.