649
 

சிவனார் திருவடி இன்பத்தினைச் சென்றெய்தி இன்புறுதல் கூடும். இதுவே, 'தேடிக் கண்டுகொண்டேன்' என்பதாகும்.

(அ. சி.) குசை - கடிவாளம் ஓடு.....பற்றுமின் - ஓடுகின்ற பிராண வாயுவை அடக்கி, வீண்போகாது செய்மின்.

(4)


13. அபக்குவன்
(பொய்க்குரு)

1652. குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருநடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

(ப. இ.) உண்மை உணர்ச்சியில்லார் அகக்கண் குருடாகிய அறியாமையினை நீக்கும் மெய்க்குருவினைக் கைக்கொள்ளார். அறியாமையை அகற்றும் நெறியே தெரியாத பொய்க்குருவினை மெய் எனக் கொள்வர். அங்ஙனங் கொள்ளுவதால் வழிகாட்டத் தெரியாத குருடுங் குருடுங் கூடிக் குருட்டு ஆட்டம் கொண்டு குழியில் விழுவதுபோன்று அகக்கண் இல்லாத பொய்க் குருவினைக் கொண்டு கருக்குழியில் வீழ்வர்.

(அ. சி.) குருடு - அஞ்ஞானம். குழி விழுமாறு - குருடும் குருடும் சேர்ந்தால் குழியில் விழுவதுபோல, அஞ்ஞானம் நீங்காத குருவைக் கொண்டால் கொண்டவனும் குருவும் பிறவிக் குழியில் விழவேண்டியது தான்.

(1)

1653. மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

(ப. இ.) மறைப்பாற்றல் மனத்தை வினைக்கீடாக இயக்குவதோர் மாயக்கண்ணாடியாகும். முகப் பார்க்கும் கண்ணாடியில் முன்புறம் ஒளியுள்ளதாகக் காணப்படும். பின்புறம் பூச்சுள்ளதால் மறைத்து மழுங்கலாகக் காணப்படும். ஆருயிர்களை உலகத்துடன் நடத்துங்கால் பின்புற வாயிலாகவே நடத்துகின்றது. அவ் வுயிர்களைச் சிவத்துடன் நடத்துங்கால் முன்புற வாயிலாகவே நடத்துகின்றது. முன்புறம் என்பது திறப்பும் பின்புறம் என்பது மறைப்பும் ஆகும். நினைப்பினால்கூட அம் மறைப்பாற்றலின் சாயலையுங் காணமாட்டார். ஆருயிர்கள் தாம் செய்து நுகரும் வினைப்பயன்களை நூன்முறையான் விளக்கியும் மனங்கொள்ளார். இத்தகையோர் சிறப்பு எய்த விரும்பாது பிறப்பு எய்த விரும்பித் தாழ்ந்து போவோராவர்.

(அ. சி.) மாயக்கண்ணாடி - திரோதான சத்தி. இச் சத்தி முன்புறம் ஒளியுள்ளதாயும் பின்புறம் மங்கலாயும் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி