1754. குறிக்கின்ற தேகமுந் தேகியுங் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. (ப. இ.) நன்மைக்குத் துணையென்று குறிக்கப்படுகின்ற உடலும், உடலையுடைய உயிராகிய உடலியும் அருள்நினைவுடன் கூடினால் அவை செம்மையாக நிற்கும். உயிர்ப்புடன்கூடி நிலைபெற்ற உயிர் வாழ்கின்றது. காலவரையறைக்குட்பட்டுக் கூற்றுவனால் அவ்வுடல் பறிக்கப்படுகின்றது. அவ்வுடலும் உயிரும் சிவன் திருவடிக்கீழ்ச் சேர்ந்து சிறந்து விளங்க வேண்டிய வழிமுறையை அறியாதார் பயனிழந்து அலையும் பேயோடொப்பர். பிறங்கவென்பது பிறக்க என வலித்து நின்றது. (அ. சி.) நெறிக்கும் - நன்கு நிற்கும். பிராணன் நிறைபெற்ற - பிராணவாயுவை இருப்பிடமாகக் கொண்ட. பறிக்கின்ற - இயமனால் வலிந்துகொள்ளப்படுகின்ற. நேர்மை - முறைமை பிறக்க: பிறங்க என்பதன் வலித்தல் விகாரம்; விளங்க என்னும் பொருட்டு. (8) 1755. உணர்வுடை யார்கட் குலகமுந் 1தோன்றும் உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தவக் காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே. (ப. இ.) திருவருள் வலத்தால் திருவடியுணர்வுடையார் உலகத்தின் உண்மையியல்பினை உணர்வர். ஒரு பொருளின் உண்மையினை உணரும் வகை மூன்றாகும். அவை, திரியக் காண்டல், இரட்டுறக் காண்டல், தெளியக் காண்டல் என்ப. உலகுடல்களின் வடிவினை ஆராயாது தோற்றத்தளவானே நிலைக்குமெனக் காண்டல் திரியக் காண்டல். அவை மலம் என்றும் அறிவில்லவென்றும் தோன்றி மறைவவென்றும், உருவுள்ள வென்றும் தெரிவது இரட்டுறக் காண்டல். அவை ஆண்டவன் திருவடியை ஆருயிர் அடைவதற்கு அவனருளால் தரப்பட்ட இரவற் கருவிகள். அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அவன்பால் ஒப்புவிப்பதே முறைமையும் கடமையும் ஆம் என்று நிறைநெஞ்சில் நினைப்பதே தெளியக் காண்டல். இம் முறையான் உணர்வார் உள்ளத்தில் உலகவுண்மை தோன்றும். அவ்வாறு அருளால் உலக வுண்மையினை உணர்ந்தவர்க்குப் பிறரெய்தும் மூவகைத் துன்பமும் இல்லை. அருளால் - சிவகுருவால் சிவத்தினையுணர்ந்த மெய்யடியார் உணர்ந்த அப்பொழுதே இறை உயிர் தளை என்னும் முப்பொருள் உண்மையினையும், அப்பொருளின் தொடர்பினையும், எய்ப்பில் வைப்பாம் திருவடியினையும் செப்பமுற உணர்வர். (அ. சி.) உணர்வு உடையார் - பதி, பசு, பாச உணர்ச்சி உடையார். உணர்ந்த அக் காலம் - பதியை அறிந்த அக் காலத்தில். உணர்ந்து கண்டார் - பதி, பசு, பாச இயல்பின் உண்மை நிலையைக் கண்டார். (9)
1. மண்முதற். உண்மைநெறி விளக்கம், 1.
|