788
 

25. ஐந்திந்திரியம் அடக்கு முறைமை

1993. குட்ட மொருமுழ முள்ள தரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் 1வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வலைகொணர்ந்து
இட்டனன் யாமினி யேதமி லோமே.

(ப. இ.) ஒருமுழ ஆழமும் அரைமுழப் பரப்பும் உள்ளதாகிய வட்டமாக அமைந்ததொரு முகஞ்சேர் நீர்நிலையொன்று உடம்பகத்துக் காணப்பெறும். அந் நீர்நிலையுள் வாழ்வன புலன்களாகிய மீன்கள் பல. நம்முள் நின்று நம்மை யியக்கும் திருவருளால் நாம் சிவனைப் பொது நீக்கித் தொழுதனம். அதனால் சிவபெருமான் அம் மீன்களைச் செம்மைப்படுத்தச் செம்பரவனாகத் தோன்றியருளினன். கடலில் வலைவீசி மீன் படுத்து மருளினன். அதனால் அம் மீன்கள் செம்மைக்குத் துணையாயின. அதனால் நாம் ஐம்புலப்புன்மைத் துன்பத்தினின்று நீங்கிச் சிவஇன்ப நினைவில் தூங்கினோம் என்க. தூங்குதல் - ஆழ்தல்; அழுந்தல். ஐம்புலன் அடக்குமுறைமை ஆண்டவனை வழிபடும் முறைமையேயாம். பரவன்: பரதவன்.

(1)

1994. கிடக்கும் உடலிற் கிளரிந் திரியம்
அடக்க லுறுமவன் தானே யமரன்
2விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கு மளவே.

(ப. இ.) அனைத்துயிரும் நன்னெறி எய்தும்பொருட்டுச் சிவபெருமானால் அமைத்தருளப்பட்ட உடம்பின்கண் காணப்படும் பொறிகள் அந் நன்மைக்குத் துணையாகவே அமைக்கப்பட்டன. மலச்சார்பினால் அவைகள் தீயவழிகளில் கிளர்கின்றன. அவ் வழியில் நாமும் சென்று விடாது நலச்சார்பால் 'தம்மை ஐந்து புலனும் பின்செல்லும் தகையினராய்' ஒழுகுதல் வேண்டும். அங்ஙனம் ஒழுகுதலாவது தம்மைச் சிவபெருமான் திருவடிக்கே ஒப்புவித்து மீளா அடிமையாய் வாழ்தல். இதுவே புலனடக்கமாகும். இத்தகைய புலனடக்கமுள்ளவரே புலவராவர். அப் புலவரால் விரும்பப்படுபவரே அமரராவர். அமரர் - விரும்பத்தக்கவர். அமர்வு - விருப்பம். உடம்பாகிய விடக்கின்கண் அருந்தல் பொருந்தல்களாகிய இரண்டின்பத்தினும் ஈடுபாடுற்று உள்ளம் சென்று நடந்தால் உயிர்ப்பு வீணாகும். அவ் வுயிர்ப்பு நடக்கும் வரை உடலும் நடக்கும்.


1. ஒருமுழ. அப்பர், 4. 44 - 2.

" கண்கள். 8. திருப்படையாட்சி, 1.

" புழுப்பெய்த. அப்பர், 4. 52 - 2.

" பாரார். 8. திருவம்மானை, 2.

" காட்டகத்து. " பண்டாய நான்மறை. 3.

2. விடக்கொருவர். சம்பந்தர், 2. 30 - 10.