2010. குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர் முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின் குருடரும் வீழ்வர்கள் முன்பின் னறவே குருடரும் வீழ்வார் குருடரோ டாயே. (ப. இ.) புறக்கண் குருடராக இருப்பவரும் அகக்கண்ணாகிய அறிவு நாட்டமுடையாரும் ஒரு குருவை நாடுவர். அக் குருவாய் வருவார் புறக்கண் உள்ளாராய் நல்லொழுக்க முதலிய அகக்கண் குருடரய் உள்ளவரும் கோலத்தால் குருவாய் வெளிப்படுவர். இவ் விருதிறத்தாரும் ஒருவகையான் முழுக்குருடரே யாவர். அக் குருக்கள் கோயில் வழிபாடாம் கோலைக் காட்டி மெய்யுணர்வுக்குத் துணைபுரிவது போல் விளம்புவர். அவர் பொய்ம்மையை அறியாது மெய்ம்மையெனக் கொண்டு வழிபட்டால் இருவரும் பிறப்பு இறப்புக்களாகிய முரண்பட்ட பாழ்ங்குழியில் முன் பின்னாக வீழ்வர். இயற்கைக் குருடராகிய உயிர்களும் செயற்கைப் பாவக்குருடர்களாகிய குருடருடன் வீழ்ந்து அகக்கண்ணும் குருடராய்க் கழிவர். (அ. சி.) முரணும் - மாறுபட்ட. பழங்குழி - பாழ்ங்குழி. முன்பின் அற - முன்பின் என்று இல்லாது. (5)
27. சற்குரு நெறி 2011. தாடந் தளிக்குந் தலைவனே சற்குரு தாடந்து தன்னை யறியத் தரவல்லோன் தாடந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் தாடந்து பாசந் தணிக்கு மவன்சத்தே. (ப. இ.) சிவகுருவாக எழுந்தருளி வந்து தலையளிபுரியும் சிவனும் அதற்கு வழித்துணையாக நிற்கும் குலகுருவும் கருத்தில் ஒருவரேயாவர். சிவபெருமானின் திருவடியிணையினைத் தந்தருள்பவனே மெய்க்குரவன். மெய்க்குரவன் எனினும் சற்குரு எனினும் ஒன்றே. திருவடியிணையினைத் தந்தருளித் தன்னையும் உண்மையாக அறிவிப்பவன் மெய்க்குரு. தாளை அருளித் தத்துவாதீதமாகிய அப்பால் நிலைக்கண் ஆருயிரைச் சாரச்செய்பவன் குரு திருவடியினைத் தந்தபின் பாசந் துடைத்தருள்வன். அவன் என்றுமுள்ள மெய்ப்பொருளாவான். சத்து - மெய்ப்பொருள். (1) 2012. தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதந் தவிரவை தான்நமன் தூதுவர் கூட்டந் தவிரவைத் தான்பிற வித்துயர் தானே. (ப. இ.) சிவகுருவாக எழுந்தருளிய சிவன் ஆருயிர்கட்கு அளித்தருளும் அருளிப்பாடுகள் பலவாம். அவை வருமாறு: தன்னடியார்
|