(ப. இ.) நாதமாகிய ஒலியின்முடிவும், அவ்வொலியாற் பெறப்படும் நால்வகையான அறிவின்முடிவும், வேதத்தின் முடிவும், என்றும் உலைவின்றி நிலைபெற்று நிற்கும் மெய்ம்மைச் சிவபெருமானின் பேரின்பமும், திருவருள் நடத்தால் வந்தெய்தும். குற்றமற்ற நன்மைக்கொள்கலமாம் அருளோனாகிய சதாசிவப் பேரின்பத்து நாதப்பிரமமாகிய ஓம் மறை சிவநடம்புரியும் தவநிலையமாகும். (அ. சி.) தாது - குற்றம். (31) 2747. சிவமாதி ஐவர்திண் டாட்டமுந் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் பரனெங்குந் தானாக ஆடுந் தவமாஞ் சிவானந்தத் தோர்ஞானக் கூத்தே. (ப. இ.) அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான் என்று சொல்லப்படும் தூமாயைக் கண்ணுள்ள திருவுருவினர் ஐவர். அவர் முறையே சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் நிலைகளிலுள்ள திருவருட்பேற்றினராவர். அவர் உலகநோக்கிச் செய்யும் உழைப்பாகிய திண்டாட்டமும் மெய்யுணர்வுக் கூத்தால் விலகும். அத் திருக்கூத்தாலேயே நன்னெறி நான்மைநற்றவ மேற்கொண்டார்பால் ஒட்டாது விட்டுநிற்கும் சிற்றுணர்வாகிய உயிரிமையும், சுட்டுணர்வாகிய பிணிமையும் ஆங்குத் தனித்து நீங்கும். தவமே வடிவமாகவுள்ள விழுப்பொருளாம் சிவன் தனது பேரருளால் தானாக ஆடியருள்வன். இத் திருக்கூத்தால் மேலன நிகழும். இதுவே நற்றவமே வடிவமாகச் சிறந்த சிவானந்தத்தோர் அருளால் கண்டு நுகரும் திருவடி ஞானத் திருக்கூத்தென்க. உயிரி: உயிரையுடையது. உயிர் - மூச்சு. (அ. சி.) திண்டாட்டம் - உழைப்பு. தவமாம் பரன் - தவ உருவனான சிவன். (32) 2748. கூடிநின் றானொரு காலத்துத் தேவர்கள் வீடநின் றான்விகிர் தாவென்னு நாமத்தைத் தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறன்றே. (ப. இ.) ஆருயிர்களின் அரும்பெரும் நன்மைக்கு இடமாக நிற்பது மாயை. அம்மாயை தொழிற்படும் பொருட்டு அதனுடன் கூடிநின்றருள்பவன் சிவன். ஒருகாலத்துத் தேவர்கள் வினைக்கீடாக மாள்வெய்தினர். அக்காலத்தும் ஆண்டுநின்றருளினன். விண்ணவர்கள் விகிர்தா என்னும் திருப்பெயரை ஒதித் தேடும்படியாக நின்றருளினன். விகிர்தன் - செய்யப்படாதவன்; இயற்கையாகவுள்ளவன்; ஒருவழிப்பட்ட செயலில்லாதவன். விகிர்தன் - ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளிப் பொருள்கட்கும் ஒளிகொடுத்து ஆட - தொழிற்பட நிற்பவனும் அவனே. அவனே ஆரருளால் அடியேனை ஆட்கொண்டருளினன். (அ. சி.) கூடி - மாயையோடு கூடி. வீட - அழிய ஒளியாட - ஒளி உண்டாக. (33)
|