1180
 

(ப. இ.) திருவடிப் பேற்றிற்கு வேண்டும் நன்னெறிநான்மைத் தவமுயற்சி விளைந்துகிடந்தது. அதுவே வீடுபேற்றிற்கு வித்தாகும். அமிழ்த நிறைவாகிய அமுதக்கேணி காதம் எனப்படும். அதுவும் மேலைக்கு வேண்டும் திருவடிநினைவாம் அமுதம் விளைந்துகிடந்தது. அவ்விளைவினை நனிமிகு விழைவுடன் கொள்வார்க்கு உடம்பகத்துக் காணப்படும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முக்காதமாகிய மூன்று மண்டலங்களிலும் விளைந்துகிடந்ததென்க. நன்னெறிநான்மை: (2615) சீலம், நோன்பு, செறிவு, அறிவு. காதம் என்பது செய்யுட்டிரிபால் காதெனக் கடை குறைந்து நின்றது.

(அ. சி.) மேலைக்கு - மோட்சத்துக்கு. காதம் - அமுத கேணி. விளைந்து என்னும் அடுக்கு அளவின்மையைக் குறித்தது. முக்காதம் - மூன்று மண்டலம். சோமன் - சூரியன் அக்கினி.

(14)

2840. களருழு வார்கள் கருத்தை யறியோங்
களருழு வார்கள் கருதலு மில்லை
களருழு வார்கள் களரின் முளைத்த
வளரிள வஞ்சியின் மாய்தலு 1மாமே.

(ப. இ.) களராகிய உவர்நிலத்தை உழுவார்கள் என்ன எண்ணத்துடன் உழுகின்றார்கள் என்பதை யாம் அறிவதற்கில்லை. அங்ஙனம் உழுவார் என்ன குறிக்கொண்டு உழுகின்றார் என்பதும் தெரியவில்லை. அதுபோல் தவமுயற்சியின்றி மீண்டும் பிறப்பதற்கே ஆளாகி இறக்கின்றார்கள். இவர்தம் செயல் வீண்செயலாகின்றது. அதற்கு ஒப்புக்களரின் முளைத்த வளருந் தகுதிவாய்ந்த இளவஞ்சிக் கொடியானது சார்ந்த நிலத்தின் புன்மையால் பட்டுமாய்வதாகும்.

(அ. சி.) வஞ்சி - வஞ்சிக்கொடி. மாய்தல் - கேடு அடைதல்.

(15)

2841. கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்து
ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாட்பட நின்று நலம்புகுந் தாயிழை
ஏற்பட இல்லத் தனிதிருந் 2தானன்றே.

(ப. இ.) மிகவும் நுண்மைவாய்ந்த அசைவில் கொட்டகமாகிய நெஞ்சத்திடத்து, திருவைந்தெழுத்தால் செய்யப்படும் தண்சுடர்த் தழலினுள் ஆருயிரைக் கட்டுறுத்தும் ஆப்பினை வைத்திடுதல்வேண்டும். திருவருள் பிறைபோன்று ஆருயிர்களுடன் நாட்படநின்று நிலைபெற்று நலம்புரிந்து அருள் வீழ்ச்சியாகிய சத்திநிபாதமும் எய்தும். எய்தவே திருவடிப்பேரின்பப் பேரில்லத்தின்கண் அவ்வுயிர் இனிது வீற்றிருந்து இன்புறும்.

(அ. சி.) குறுநரிக் கொட்டகம் - அணு அளவு ஆய மனம் இருக்கும் உடல். ஆப்பிடு - கட்டப்பட்ட. அங்கியுள் - சிவாக்கினியில் ஆயிழை ஏற்பட - சத்தி பதிய.

(16)


1. உளரென்னும். திருக்குறள், 406.

2. அஞ்செழுத்தால். சிவஞானபோதம், 9. 3 - 1.