1191
 

2860. கூப்பிடு மாற்றிலே வன்கா டிருகாதங்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றாருளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிடு மீண்டதோர் கூரைகொண் 1டாரன்றே.

(ப. இ.) சிவனோ டொருங்கும் பாவனை முறையில் உலகக் கட்டுகள் நீங்கும். கூப்பிடும்: கூம்பிடுமென்பதன் திரிபு. மிகவும் வன்மையான காடுகள் இரண்டுள. அவை நினைப்பும் ஐயமும் ஆகிய சங்கற்ப விகற்பங்கள் என்ப. இவை அறியாமையால் விளைவன. மேற்போக வொட்டாது தடுக்கும் கள்வர் பலர் கலந்து நின்றனர். இவர்களையே ஐம்புலக் கள்வரெனவும், ஐம்புலவேடரெனவும் கூறுப. அங்ஙனம் காப்பிடுங் கள்ளரை நீக்கி நிறுத்தும் வெள்ளராகிய சிவனடியார் தொடர்ந்து நிற்கின்றனர். அருளால் அக்கள்வரைக் கூப்பிடச் செய்தனர். இவர்கள் திருவடிப் பேரின்ப வெள்ளப் பெருக்குடையராவர். வாவா என்று கூப்பிடும் பெரியதோர் கூரையாகிய வீடு கொண்டாரென்க.

(அ. சி.) கூப்பிடும் - உலகபந்தம் நீக்கும். ஆற்றில் - சிவோகம் பாவனா முயற்சியில். வன்காடு இருகாதம் - சங்கற்ப விகற்பத்தோடு கூடிய இருவிதக் காடு ஆகிய அஞ்ஞானம். காப்பிடு கள்ளர் - காவல் செய்யும் இந்திரியக் கள்வர். வெள்வர் - சிவானந்த வெள்ளப்பெருக்கு உடைய அடியவர். கூப்பிடும் - வாக்கு வியாபாரமும். கூரை - வீடு, சீவன்முத்தி.

(35)

2861. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையுங்
கட்டியுந் தேனுங் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற 2வாறன்றே.

(ப. இ.) குளமாகிய ஆருயிரின்கண் புணர்வும் புலம்புமாகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துக்கிடந்தன. சுட்டியுணரப்படுவதாகிய பெயரும் வடிவும் விடத்தக்கன. ஆதலின் அவற்றை எட்டியும் வேம்பும் என உருவகித்தனர். இவையகலவே இனியதோர் வாழையும், கட்டியும், தேனும் கலந்துண்ணலாகும். இம் மூன்றும் முறையே உண்மை அறிவு, இன்ப, வடிவ உருவமாகும். திருவருளால் இவற்றைக் கலந்து நுகரும் நன்னெறி அறியமாட்டாதார் எட்டிப்பழம் போன்று வடிவும் தோற்றமும் வனப்பும் கண்டு மயங்குவதற்கு வாயிலாகிய நிலையாத உலக இன்பத்தினையே பெரிதென நினைத்து நுகர்ந்து பின் இனைதலாகிய துன்புற்று இளைத்தொழிகின்றனர். எட்டிப் பழம் காட்சி இன்பமும் நுகர்ந்தால் மீட்சியில் இறப்புத்துன்பமும் தரும் தன்மைத்து. அதனால் அவ் வொப்பு உலகவின்பத்துக்குப் பொருந்திய ஒப்பாகும். எட்டிப்பழம்: எட்டு + இப் பழம் எனப் பிரித்து மிகவும் எளிதாக எட்டக்கூடிய இவ் வுலக இன்பமாகிய பழம் என்றலும் ஒன்று.


1. வெள்ளநீர்ச். அப்பர், 4. 75 - 9.

" காடுங்கரையும். தாயுமானவர், 30. காடுங் - 1.

2. அற்ற. ஒளவையார், மூதுரை, 17.