(ப. இ.) உடலைவிட்டுச் செல்லும் ஆவித்தன்மையின் உண்மை உணராதார், திருவருள் துணையால் அதனைக் காணுதலுமாகும். கழியும் உடம்பினுள்ளே ஆழ்ந்து அசைவறநின்று நோக்கின் என்றும் யாண்டும் நீங்காது உடனுறையும் சிவமுதலைக் காணுதலுமாகும். (அ. சி.) கழிகின்ற...பொருள் - சீவன். கழியாத....பொருள் சிவன்.(23) 743. கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. (ப. இ.) முக்கண்ணனாகிய சிவபெருமான் என்றும் பிறவாதவன். ஆவியினகத்துள் புணர்ந்துநிற்பவன். எல்லாத் திசைகளிலும் ஒன்றியிருப்பவன். அவனை உறுதியாக எண்ணின் ஆவி சிவன்நிலையாகவே நிற்கும். இதுவே எவர்க்கும் முடிந்த முடிபாகிய நிலையாகும். இவ்வுண்மை நாடவல்லார் அரியர் என்ப. (அ. சி.) கண்ணன் - முக்கண்ணன், சிவன். (24) 744. நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குக் கூறலு மாமே. (ப. இ.) திருவருள் துணையால் அறிவுக்கு அறிவாம் சிவனை இடையறாது நினைக்கும் நினைப்பாகிய நாட்டமுள்ளார்க்கு இறப்பில்லை; பிறப்பில்லை. அம் மெய்யுணர்வுத் திருவினர் வையத்து வாழும் தெய்வமாகக் கொள்ளப்பெறுவர். மெய்ப்பொருள் நாடவல்லார் அறுதியிட்டு ஆய்ந்த பொருளிதுவாகும். சிவபெருமானுடன் இரண்டறக்கூடும் திருவருள்பெற்ற திறலினர் எய்தும் பேரின்பப் பெருவாழ்வு சொல்லில் அடங்குவதன்று. (அ. சி.) நரபதி - மனிதர்களுக்குள் சிறந்தவர். (25) 745. கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறு மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே. (ப. இ.) மெய்ப்பொருள் நூற்களில் கூறும் பொருள் அகரம் சிவபெருமானாகும். உகரம் ஆவி ஆகும். தெளியவேண்டிய உண்மைப் பொருளும் இவையாகும். இப் பொருள்நாட்டம் நெஞ்சத்து உரம் பெற்று நிற்க, மகரமாகிய (நாதம்) ஓசை நடுநாடி வழியாக வெளிப்பட, உடம்பகத்துள்ள தாங்கல் ஐந்தொழில் சார்தலாம் நிலைக்களமாதலின்
|