(அ. சி.) நாடுடையார் - அரசர். மாறுடையார் - பகைவர். கூறுடையாள் - பாகம் பிரியாள்; பாகாயி. (13) 1307. கூறுமின் எட்டுத் திசைக்குந் தலைவியை ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வென மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந் தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.1 (ப. இ.) எட்டுப் புலங்களிலும் ஒட்டி நிலைபெறும் முழுமுதல்வியை அன்பகத்துக் கொண்டு இடையறாது நாடுங்கள். அவள் மெய்ப் புகழையே கூறுங்கள். அதுவே பொருள் சேர் புகழ். அதனால் அவாவை அடக்குதல் எளிது. அவாவினை அடக்குங்கள். அடக்கி, அமரர்கள் வாழ்வினையும், நிலவுலகத்துப் பிறக்கும் பிறப்பினையும் மாற்றிக் கொள்ளுங்கள். திருநாயகி திருவடியே நிலைத்த புகலிடம் என்று தெளியுங்கள். (அ. சி.) ஆறுமின் - ஆசையை அடக்குமின். மாறுமின்...தன்னையும் பிறவியை மாற்றிக் கொள்ளுங்கள். தேறுமின் - தெளியுங்கள். (14) 1308. சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர் பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர் மாவடி காணும் வகையறி வாரே.2 (ப. இ.) திருநாயகி தன் திருவடியைச் சேரும்படியான சீலம் முதலிய பெரும் தவத்தைப் புரிந்தவர்கள் 'சிவயநம' என்னும் செந்தமிழ் மறையினை உள் நாவடியில் ஓதிக் கணித்துப் போற்றுதல் வேண்டும். அங்ஙனம் போற்றுவார்க்கு வழிபாட்டின் உறைப்பு உண்டாம். அதனால் திருமுறைப் போற்றித் தொடர் புகன்று மலர்தூவி வழிபடுவர். அங்ஙனம் வழிபடும் நற்றவப் பேறுடையார் திருவடிப் பேறெய்தும் நன்னெறியினை உணர்வர். (அ. சி.) இருந்தவர் - பெருமையுள்ள தவசிகள். நாவடி - உள் நாவினாலே. பூ அடியிட்டு - பூக்களைக் கொண்டு அருச்சனை செய்து. மாஅடி - பெருமை பொருந்திய திருவடி; முத்தி. (15) 1309. ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம் ஐம்முத லாக அமர்ந்திரீ மீறாகும் அம்முத லாகி யவர்க்குடை யாடனை மைம்முத லாக வழுத்திடு நீயே.3
1. அவாவென்ப, வேண்டாமை. திருக்குறள், 361, 363. " அண்டர். அப்பர், 5. 39 - 3. " கொள்ளேன். 8. திருச்சதகம், 2. 2. பூவ. அப்பர். 5. 65 - 1. 3. ஆரும.் திருமந்திரம். 1721. " சிகரம்முகத்திற். ஆரூரர், 7. 8-7.
|