1789. புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி அறமே புகுந்தெனக் காரமு தீந்த திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே. (ப. இ.) திருவருள் நெறிக்குப் புறம்பாக நில்லாதவற்றை நிலையின என்றுணர்ந்து புல்லறிவாளனாய்த் திரிந்துழன்றேன். அத்தகைய என்னை நன்னெறிப்படுத்தித் திருவடிசூட்டி ஆட்கொண்டனன் சிவன்; அடியேனுடைய நிறமென்னும் உள்ளத்தின்கண் வீற்றிருந்தருளினன்; அடியேனைப் பற்றியுள்ள மலங்களை அகற்றித் தூயவனாக்கி அருளினன்; அடியேனைச் சிறந்தது பயிற்றுதற்பொருட்டு அறத்தின் முதல் நிலையாம் இல்லறம் புகுத்தியருளினன்; அதன்கண் சிவனை மறவாத் திருவருளமிழ்தம் அளித்தனன். இவற்றை எல்லாம் உணர்ந்து இத்தன்மைகள் எவ்வாறென அறியவொண்ணாது திகைத்திருந்தேன். (7) 1790. அருளது வென்ற அகலிடம் ஒன்றும் பொருளது வென்ற புகலிடம் ஒன்றும் மருளது நீங்க மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.1 (ப. இ.) உயிர்ப் பொருள், உயிரில் பொருள் அனைத்திற்கும் நிலைக்களமாக நின்றியக்குவது திருவருளே. அதனால் அஃது அகலிடம் எனப்பட்டது. அகலிடம் - பரவெளி. அத் திருவருள் ஒன்றே. அத் திருவருளைத் திருமேனியாகக் கொண்டிருக்கின்ற மெய்ப்பொருளாகிய சிவம் ஒன்று. அச் சிவம் எவற்றிற்கும் புகலிடமாவது; புகலுறுவது ஆருயிர்களேயாம், அச் சிவமும் ஒன்றே. அச் சிவனால் ஆருயிர்கட்கு மலத்தால் இருளும், மாயையால் மருளும், வினையால் இன்பத் துன்பங்களும், இவற்றால் பிறப்பு இறப்பும் நேர்வவாயின. இவையனைத்தும் மலமெனப்படும். இவை நீங்கச் சிவன் அடியேன் உளத்து மறவா நினைவை அருளி வெளிப்பட்டு நின்றனன். அதன் பின்பு தெருளாகிய உண்மைத் தெளிவு ஏற்பட்டது. அத் தெளிவு ஏற்பட்ட வுயிர் சிவனிலையை எய்தும். (அ. சி.) மருளது நீங்க - மயக்கம் ஒழிய. (8) 1791. கூறுமின் னீர்முன் பிறந்திங் கிறந்தமை வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் 2நீக்குமின் பாறணி யும்முடல் வீழவிட் டாருயிர் தேறணி வோமிது செப்பவல் லீரே.
1. பெரியாரைப். திருக்குறள். 892. 2. செத்துச். அப்பர், 5. 100 - 2. " வெற்புறுத்த, அப்பர், 6. 26 - 2. " யாதொரு. சிவஞானசித்தியார், 2. 2 - 22. " பிறப்பாதி. சம்பந்தார். 1. 134 - 4.
|