(ப. இ.) மேலோதியவாறு இன்பவடிவினனாய் என்றும் மறக்க ஒண்ணாதவனாய் விளங்கும் இப் பரிசுடைய சிவன் 'காலையே போன்றிலங்கும் மேனியன்' ஆதலின் அவனை இளஞாயிறுபோலும் திருவுருவினனென்று தொழுமின். அம் முறையாக அகத் தீயின் உள்ளுறைகின்றவன் அவன். அவனே அழகிய தலைவனாவன். அவனே நம் நெஞ்சத் தாமரையின் உள்ளுறைபவனாவன். அவனே வாராத செல்வம் வருவிக்கும் ஈசன் ஆவன். அவனை அவனருளால் வணங்குதல்வேண்டும். அருளால் வணங்குதல் திருவடியுணர்வால் வணங்குதல். அஃதாவது 'ஞானநூல்தனை யோதல் ஓதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றாம், ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழின்ஞான பூசை' என்பதற்கேற்றவாறு திருவைந்தெழுத்தால் வழிபடுதல். அவ் வழிபாட்டுப் பொருண்மையாம் உண்மைத்தன்மையினை நல்லார்பால் வினவாதிருந்தோமே என்று மனமார வருந்துதல் வேண்டும். (அ. சி.) அங்கியின் - உயிரின்கண் உள்ள. கமலத்துறை - உள்ளக் கமலத்திடை உறையும். மெய்ப்பரிசே - உண்மையான நெறியே. வினவாது - விசாரித்துத் தேடாது. (9) 2055. கூடகில் லார்குரு வைத்த 1குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவார்கள் பாடகில் லாரவன் செய்த பரிசறிந்து ஆடவல் லாரவர் பேறெது வாகுமே. (ப. இ.) செவ்விநோக்கிச் சிவபெருமான் சிவகுருவாய் எழுந்தருள்வன். அவன் சிவதீக்கையினைத் திருமுறைவழிச் செய்து ஆட்கொள்வன். சிவபூசையினைத் திருவைந்தெழுத்தால் புரியத் திருவருள் புரிவன். அதுவே குரு வைத்தகுறி கண்டு கூடுவதாகும். அவ் வுண்மையினை நாடுவதாகிய சிந்தித்தலே நம்கடன். அதனை நாடாது நயமில்லனவற்றை நயமெனப் பேசி நாணிலர் திரிவர். சிவபெருமான் ஆருயிர்க்கு அளவின்றிப் புரியும் உளமகிழ் சிறப்பினைப் பாடிப் பரவுதல் வேண்டும். அதுவும் செய்கிலர். என்னே இவர்தம் புன்மை! குரு வைத்தருளிய குறிகண்டு நாடவும் பாடவும் ஆடவும் வல்லார் தேடரிய அளவிலாத் திருவடி யின்பினை எய்துவர். அவர் பெறும் அப் பெரும்பேற்றினை எவரே அளவிட்டுரைப்பர்? ஒண்ணாது என்னும் பொருளில் 'பேறெதுவாகும்' என வினா வாய்பாட்டான் ஓதி உணர்த்தியருளினர். (10) 2056. நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர் நஞ்செம் பிரானென்று நாதனை நாடொறுந் துஞ்சு மளவுந் 2தொழுமின் தொழாவிடில் அஞ்சுற்று விட்டதோர் ஆனையு மாமே. (ப. இ.) மெய்யன்பர்தம் பொய்யிலுள்ளத்து மேவி நிறைந்து அங்கு வீற்றிருந்தருளும் நெடுஞ்சுடர் சிவபெருமான். அவனே
1. இந்நிலைதா. சிவஞானசித்தியார். 8. 2 - 24. 2. தூமென். அப்பர், 4. 104 - 3. " அஞ்சினால். அப்பர், 4. 26 - 5.
|