(ப. இ.) திருவடிக்கண் பேரன்பு செய்தற்கு வாய்த்த இளம் பருவத்தே காலையும் மாலையும் ஆகிய இருபொழுதினும் வஞ்சகமின்றி அன்பு செய்தால் ஊழ்வினையால் விளையும் நிலையாப் பொருள் நுகர்வும் அப் பொருள்களைப் பற்றும் ஐம்புலன் நிகழ்வும் என்றும் நிலைத்த திருவருட்புகலைப் பொருந்தி நீக்கப்பெறும் அவை நீங்கவே ஐயனாகிய சிவபெருமானும் ஆண்டு வெளிப்பட்டு நின்றருள்வன். 'காலமுண்டாகவே காதல் செய்துய்மின்' எனவும், 'வேண்டின் உண்டாகத் துறக்க' எனவும் நிலவும் செந்தமிழ்த் திருமறைகளை ஈண்டு நினைவுகூர்க. காலம் அகவை இளமையும் பொழுதினமையும் குறிப்பதாகும். (அ. சி.) எய்திய காலத்து - அன்புசெய்தற்கு ஏற்ற காலத்தில். மெய் செயின் - உண்மையிலேயே அன்புசெயின். (7) 2557. எய்துவ தெய்தா தொழிவ திதுவருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய் புலன்நெறி யொன்பதுந் தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள 1லாகுமே. (ப. இ.) திருவடிப் பேரன்பு காரணமாகத் திருவருள் வந்தெய்தும். எய்தவே பொய்யும் புலனும் எய்தாதகலும். இம் முறையாகத் தலையாய தண்ணளி வாய்ந்த சிறந்த நந்தி ஆருயிர் உள்ள அருள் செய்தான். அவன் திருவருள் நினைவால் பொய்ப் பொருளை உள்ளுணர்த்தும் புலன்வாயில்களாம் ஒன்பதினையும் அடைத்தல் வேண்டும். அங்ஙனம் அடைத்தால் மெய்யுயிர்ப்பு என்று சொல்லப்படும். புரவியாகிய குதிரையை மேற்கொண்டு செலுத்தும் மேன்மையுண்டாம்; அஃதாவது அகத்தவப் பயிற்சி யுண்டாகும். அகத்தவம் - யோகம். (அ. சி.) புலனெறி ஒன்பது - ஒன்பது வாசல்கள். தாட்கொளின் - அடைத்தால். மெய்யென் புரவியை - தேகத்தில் ஒடும் வாசியை. (8) 2558. கைகலந் தானைக் கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமன்றே. (ப. இ.) ஆருயிரின் நல்லொழுக்க நெறியில் உடனாய்க் கலந்து நிற்கும். கடவுளை, அவ்வுயிரின் அன்பு நிறை யுள்ளத்து அவர் நினைந்த வடிவுடன் அப்பொழுதே வெளிபட்டருளும் நந்தியை வணங்குமின். மெய்யன்பின்கண் மேவிக் கலந்த மேலோனைத் தொழுமின். அவனே மறை முதல்வன். அவனே பொய்ப் பொருளாம் உலகியற் பொருள்களை நிலையெனப்பற்றி உலைவுறும் நெஞ்சினராய பொய்கலந்தார் முன்புகுந்தறியாய் புண்ணியன். அவனே இயற்கைத் தூயோனாவன். அவன் பொய்ப் பொருளின் பற்றற்றார்க்கே மெய்ம்மைப் புகலிடமாவன். பொய்ப் பொருள் - நிலையாப்பொருள்; உலகியற்பொருளும் உடலும். (9)
1. மெய்ப்பால், அப்பர், 6. 26. - 4. 2. பதத்தெழு. அப்பர். 4. 108 - 2.
|