220
 

16. பாத்திரம்

484. திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே.1

(ப. இ.) திலமத்...குன்றுமே - எள்ளளவு பொருள் அகனமர்ந்த அன்பினராய் மிகக் கனிந்த மொழியினராய், முகமலர்ந்த நகையினராய், தலைகுனிந்த நிலையினராய், குறிப்புணர்ந்த அறிவினராய்ச் சிவஞானிகளுக்குப் பணிவுடன் கொடுத்தால் அளவில்லாத அழிவில்லாத செல்வ வாழ்வும், அறமும், அருளும், திருவடிப் பெருவாழ்வும் எளிதின் வந்தெய்துறும். முப்பொருளுண்மை கொள்ளா மைப்படிந்த மனத்தர் செப்பும் முழுமூடராவர். அறிந்தோ அறியாமலோ அம் மூடர்க்கு ஈயுமாறு நேர்ந்துவிட்டால் அந்தோ பயனிழந்து மேலாம் திருவடியின்பமும் கிட்டாது குன்றிப்போம் அம்மட்டோ! அம்மூடர்க்கு ஈந்த தானப் பயனால் இழிபிறப்பு அடைந்து, அழிவில் அல்லலுழப்பர். திலம் - எள். பலம்-கிட்டும் பேறு. முத்தி - வீடு. சித்தி - சிவவுலக வாழ்வு. பரபோகம் - திருவடிப்பேறு. நின்மூடர் - சிவனினைவு அற்றோர். பரபோகமும் குன்றும் - திருவடிப் பேற்றினுக்கு உரிய வழியும் கிட்டாது.

(1)

485. கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.2

(ப. இ.) உயிரைத் துன்புறுத்திக் கொண்டு செல்லும் கூற்றுவன் செயலை உலகோர் நேரே கண்டிருந்தனர். கொண்டிருந்... குணத்தனை - தன்னைவழிபட்டார் பொருட்டுக் கூற்றுவன் உயிரைக் கொள்ளை கொண்ட எண்குணக் கடவுளை. நன்றுணர்ந்தார்-நானெறியின் நன்மையினை உணர்ந்தவர். தேவருமாவர்-சிவவுலகத்து வாழும் தேவரும் ஆவர். மாற்றருங் கூற்றுவனை மாற்றும் ஆற்றல் சிவபெருமான் ஒருவனுக்கே யுளதென்பதும், அப்பெருமை தங்களைச் சாரவேண்டும் என்னும் அவாவும் 'புக்கடிமையினால்' விளங்குவதென்க.

(2)

486. கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து3
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத இடிஞ்சிலு மாமே.


1. சிவஞானச். சிவஞானசித்தியார், 8 : 2 - 16.

" நெஞ்சின்: திருக்குறள், 276.

" அடங்கலர்க். சீவகசிந்தாமணி, முத்தி - 27.

2. கூற்றங். திருக்குறள், 269.

" புக்கடிமையினால். திருவாய்மொழி. 3113.

3. கருவாய்க். அப்பர், 4 : 95 - 6.