1270. கையவை யாறுங் கருத்துற நோக்கிடும் மெய்யது செம்மை விளங்கு வயிரவன் துய்ய ருளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப் பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. (ப. இ.) வயிரவக் கடவுளின் திருக்கைகளைக் காண்பார், அக் கைகளிற்காணும் மேற்கூறிய ஆறு பொருள்களையும் காண்பர் . அக் கடவுளின் திருமேனி செம்மை நிறம் பொருந்தியதாக இருக்கும் . சிவனினைவு மாறாத நெஞ்சினையுடைய தூயவருள்ளத்தில் வயிரவக் கடவுள் விளங்குவன். அகம் புறம் வாய்மை பெற்றமையோடு பொய்யினை அறவேவிட்டு நெஞ்சே நீ பூசை செய்வாயாக (அ. சி.) கையவை ஆறு - வயிரவர்க்கு ஆறு கைகள் . மெய்யது செம்மை - நிறம் சிவப்பு. (4) 1271. பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம் பூசனை செய்யு மதுவுட னாடுமால் பூசனை சாந்து சவாது புழுகுநெய் பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.1 (ப. இ.) வயிரவக் கடவுளின் வழிபாட்டிற்குத் திருமுறைப் போற்றித் தொடர் ஓராயிரம் ஓதி மலர் வழிபடுவாயாக . திருமுழுக்குக்குச் சிறந்தது தேனேயாம் சாந்து சவ்வாது புனுகு முதலிய நறுமணப் பொருள்களை அணிவிப்பாயாக இங்ஙனம் பூசை செய்து சாத்துதலைச் செய்வாயாக. பூசல் - சாத்துதல். (அ. சி.) ஓராயிரம் பூசனை - ஆயிர நாமப் பூசனை. மது - தேன் பூசலை - சாத்துப்படி செய்தலை. (5) 1272. வேண்டிய வாறு கலகமு மாயிடும் வேண்டிய ஆறினுண் மெய்யது பெற்றபின் வேண்டிய வாறு வரும்வழி நீநட வேண்டிய வாறது வாகுங் கருத்தே. (ப. இ.) நெஞ்சே நீ விரும்பியவாறு நின் பகைவர்களுக்குள் போர் மூண்டு அவர்கள் மாண்டழிவர். (1261-இல் ஓதிய) அறுவகைச் செயல்களுக்குரிய உண்மையை அடைந்தபின் நீ விரும்பியது கைகூட வேண்டிய வாறு நடப்பாயாக. உன் கருத்து அவ் வழியாகவே வந்து கைகூடும். (அ. சி.) கலகமும் - பகைவர்களுக்குள் கலகமும் மெய்யது பெற்றபின் - உண்மையை அறிந்தபின். (6)
1. அஞ்சு. 12. திருக்குறிப்புத் தொண்டர், 81. " விரித்தபல். அப்பர், 4. 73 - 6.
|