எட்டும் பாலை ஒக்கும். இச்சிறந்த அகமலரால் தொடுக்கப்படும் மாலை துளக்கமில் விளக்கனைய திருவடியுணர்வும், அத் திருவடியினையே நாடும் எண்ணமுமாகும். அவ்வுயிர் திருவடிக்கண் விரும்பி உறைந்த இடமே சிறந்த நிலைப்பான இன்பிடமாகும். (அ. சி.) அணு - உயிர். (1) 240. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்1 செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. (ப. இ.) கொல்லென்றும், எறிஎன்றும், குத்துஎன்றும், கூறி அங்ஙனமே செய்வித்தும் செய்தும்வரும் கொடியோர்களைக் கூற்றுவன் தன் ஏவலர்களாகிய வலிய இடிகாரர், வன்மையுள்ள கயிற்றினாற் கட்டி இடிமுழக்கம் போல் முழங்கி நில்லென்று கூறித் தீவாய் நரகிடை வீழ்த்துவர். ஆருயிர்கள் பருவுடம்பினின்று கருதவும் காணவும் கேட்கவும் ஒண்ணாத அஞ்சத்தக்க கொடுமைகளைச் செய்கின்றன. அவ்வுயிர்கள் எவ்வெவ்வாறு செய்தனவோ அவ்வவ்வாறே அவ்வுயிர்களைக் கூற்றுவனின் ஏவலாளர்கள் நுண்ணுடலில் வைத்து மாற்ற முடியாத துன்பத்தைச் செய்கின்றனர். அத்துன்பத்திற்கு மருந்தும் கிடையாது. துன்புறுவார்க்கு இரங்குவாரும் அங்குக் கிடையார். ஆகவே அத்துன்பம் பொறுக்க முடியாத பெருந்துன்பமாகும். இதனை மனங்கொண்டு பிறர்க்குத் துன்பஞ்செய்யாது இன்பஞ் செய்தல் நன்று. (அ. சி.) இடு - எறி. (2) 241. கொலையே களவுகட் காமம்பொய் கூறல் மலைவான பாதக மாம்அவை நீக்கித்2 தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. (ப. இ.) கொலை, களவு, கள்ளுண்டல், அறந்திறம்பிய காமம், பொய் என்னும் ஐந்தும் மாறா மயக்கம் தரும் பெரும் பாவங்களாகும். இவ்வைந்தினையும் புரிவார் சிவனடி சார்தலின்றித் தீவாய் நரகிடை வீழ்ந்து மாறாத் துன்பத்தினை எய்துவர். இவற்றை அறவே ஒழித்துத் தலைமையும் இயற்கை உண்மையும் வாய்ந்த சிவபெருமான் திருவடியினைத் தலைப்பட்டு இறவாப் பேரின்பம் சார்ந்த நல்லார்க்கு நரகத் துன்பம் இல்லை. அழிவிலாத் திருவடி உணர்வின்பத்திருத்தலே என்றும் நிலைநின்ற மெய்ப்பொருளாகும். தலைப்படல் - சார்தல். மலைவான என்பதற்கு அப்பாவங்கள் தம்மைச் செய்தாருடன் பின் விளைவாய் வந்து போர் செய்யும் தன்மை வாய்ந்தன என்றலுமொன்று. கொலை களவு கள் காமம் பொய்யென்னும் ஐந்தும் அகல, முறையே அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் ஐந்தினையும் மேற்கொண்டு இடையறாது ஒழுகுதல் வேண்டும். (3)
1. கருமையாற். ஆரூரர், 7 - 90 - 4. 2. களவு பொய். 12 - அப்பூதியடிகள், 2.
|