497
 

(ப. இ.) மூலாதாரத்தில் தெளிவாகக் காணப்படும் சக்கரத்தினுள்ளே எல்லா எழுத்துக்குந் துணைசெய்யும் அளியுடைய அகரம், நடுவாக எழுதப்படும் . வட்டவடிவான குண்டலினி ஆற்றல் (பாப்பிருக்கை) அரவு வட்டமிட்டது போன்று காணப்படும் . அதனை மனங்கூடி அங்ஙனம் அமைத்து வழிபடுவராயின் நாடியது எளிதாகக் கைகூடும்.

(அ. சி.) அரவினை - குண்டலினி சத்தியை . அளிந்து - கனிந்து.

(34)

1265. காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித் தெழுந்தமைந் தூறி எழுந்ததாய்ப்
பாலித் தெழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

(ப. இ.) காலரை முக்கால் முழுமை என்னும் மாத்திரைகளையுடைய மந்திரங்களை முறையாக ஒலிக்க, அவ்வோசை எழுந்தன. பின்பு அது சக்கரத்துக்குப் பொருந்த அமைந்தது. மேலும் ஊறித் திகழ்ந்து முழங்கும் . கருதிய பயனைக் கைகூடச் செய்தபின், அம் மந்திரத்தினை முறைப்படி மாற்றி ஒலிக்க உணர்ந்தவர்களுக்கு வேறு கருதிய பயனும் கைகூடும்.

(அ. சி.) கால்...மந்திரம் - கால் முதலிய மாத்திரையளவாக உச்சரிக்கப்பட்ட மந்திரம். மாலுற்ற - விரும்பி உச்சரித்த.

(35)

1266. கொண்டஇம் மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவிற் பகையற விண்டபின்
மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத் தெழுந்து நமவெனே.

(ப. இ.) மேற்குறித்த மந்திரமொலித்து வேண்டுவ பெற்று அமைந்தபின் அதன் செயலறுதியாகக் கூத்தன் எழுத்தாம் சிவ என்பதை உதடு அசையாமல் உண்ணாவில் பண்டைப் பகையாகிய ஆணவம் அறும்பொருட்டு ஒலித்தபின். பொன்னம்பலத்தின்கண் விளங்கும் மணி விளக்காய் உள்ளம் பொலிவுறும். அத்தகைய உள்ளத்தில் நம எனக் கூட்டிச் 'சிவயநம' ஒலிப்பாயாக.

(அ. சி.) கூத்தன் எழுத்து - ஆதி எழுத்து; சிவன் எழுத்து உணாவில் - உள்ளே உள்ள நாவால் (உதடுகள் அசையாமல்)

(36)