525
 

1347. கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்
கண்டஇம் முத்தங் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரித ழானவள்
உண்டங் கொருத்தி உணரவல் லாருக்கே.

(ப. இ.) திருவருளம்மையின் காதணியும், திருமுடியும், ஆடையும் பொன்வண்ணமாவன. திகழ்கின்ற பெரிய முத்துக்களாலாவன அணிகள். திருமேனி தழல் வண்ணம். தொன்மையிலேயே இயற்கைச் செவ்வொளியாய் விளங்குவன உதடுகள். ஒப்பில்லாத அம்மையின் இத் திருவுருவினை அவள் அருட்கண் கொண்டு கண்டு வழிபடுக. அத்தகை வழிபாட்டினர்க்கே அம்மை வெளிப்பட்டருள்வள்.

(அ. சி.) கனகம்குழை - பொன்னாலாகிய குழை. கண்டவிம் முத்தம் -பருமுத்து. கனல் திருமேனி - கனல் நிறமேனி. சோதிபடர் இதழ் - செவ்வதரம்.

(54)

1348. உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கிற்
கலந்திருந் தெங்குங் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை யொளியது காணுந்
தணந்தெழு சக்கரந் தான்தரு வாளே.

(ப. இ.) திருவருள் துணையால் சக்கரத்தில் தோன்றும் திருவுருவினை நன்றாக வுணர்ந்திருந்து உள்ளத்தின் உள்ளே நோக்கினால் நோக்குவார்க்கு எங்குங் கலந்து பேரருள் பொழிவள். அகத்தெழும் ஓசை மணி முதற் (586) பத்தும் புலனாகும். அம்மையும் சக்கரத்தினின்றும் போந்து வெளிப்பட்டு உருவாய்த் தோன்றி அருள்புரிவள்.

(அ. சி.) மணந்து - கலந்து. ஓசை - மணி கடல் முதலிய பத்து விதமான ஒலி. தணந்து - நீங்கி; (அஃதாவது சக்கரத்தினின்றும் தோன்றி.)

(55)

1349. தருவழி யாகிய தத்துவ ஞானங்
குருவழி யாகுங் குணங்களுள் நின்று
கருவழி யாகுங் கணக்கை யறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே.1

(ப. இ.) வீடுபேற்றினைத் தருதற்குத் திருவடியுணர்வு - சிவஞானம் கைவருதல்வேண்டும். அது 'தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தக்' கைகூடும். குருவருள் கிடைத்ததும் சிவபெருமானின் எண் குணங்களும் ஆருயிர்மாட்டு மேம்பட்டுத் திகழும். திகழவே பிறப்புக்குக் காரணமாகிய வினைத்தொடக்கு அறும். வினைத்தொடக்கறப் பெருவழியாகிய செல்லாத செந்நெறிச் செல்வர். செல்லவே திருவருட் பேரொளி முன்னிற்கும்.

(அ. சி.) தருவழி - முத்தியைத் தரக்கூடிய. கரு...அறுத்து - பிறவி வேரை அறுத்து. பெருவழி - முத்தி.

(56)


1. கல்லாதார், இல்லானை. அப்பர், 6. 84 - 8; 11 - 3.