689
 

அடைவானாகிய உயிரையும் இடைநின்று பிரிக்கின்றது. அங்ஙனம் பிரிப்பதாகிய மாறுபாட்டினை நீக்கி, எல்லாவற்றையும் தன் பெரு நிறைவில் கருக்கொள்வதாகிய அடக்குதலைச் செய்துகொள்ளும் சிவ பெருமானை அவன்திருவருள் துணையால் கண்டுகொண்டேன்.

(அ. சி.) பிரிக்கின்ற விந்து - சிவனையும், சீவனையும் பிரிக்கின்ற மாயை. பிணக்கு - மாறுபாடு. கருக்கொண்ட - அண்டங்களையும் ஆன்மாக்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்ற.

(5)

1752. கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி யடிவைத் தருண்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாங்குளிக் கொண்டே.

(ப. இ.) ஆருயிர்கள் வினைக்கீடாகத் தன்னால் (சிவனால்) கூட்டப்பட்டு மாயாகாரிய உடலுடன் கூடயிருக்கின்றன. அவ்வுடலையும், அதனால் ஈட்டிய பொருள்களையும், அவற்றால் வாழும் உயிர்களையும் தன் திருவடியில் சேர்த்துத் தூய்மையும் இன்பமும் சேர்ப்பித்தல் வேண்டுமென்னும் குறிப்பினைத் திருவுள்ளங்கொண்டு செவ்வி நாடியிருப்பன். செவ்வி வாய்த்ததும் அவ்வுயிர்க்குத் திருவடி சூட்டியருள்வன். தன் பேரறிவுப் பேராற்றலால் அவ்வுயிர் உடலில் துன்பப்படலை நீக்கிப் பற்றறச் செய்தருள்வன். இதுகாறும் குளியாகிய மறைவினைக்கொண்டருளிய அவன் வெளிப்பட்டு உயிரைத் தானாக்கிவிடுவன். இதுவே தானவனாகும் என்பது.

(அ. சி.) பாடல்: படல் என்பதன் நீட்டம்; துன்பத்துக்கு இடமான குளிக்கொண்டே - சீவனுடன் மறைந்து நின்றே.

(6)

1753. கொண்டா னடியேன் அடிமை குறிக்கொள்ளக்
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்
கொண்டான் பலமுற்றுந் தந்தவன் கோடலாற்
கொண்டா னெனவொன்றுங் கூறகி லேனே.

(ப. இ.) அடியேன் சிவனுக்கு அடிமையாகவேண்டும் என முழு அன்புடன் கருதுதலும் அச் சிவனும் அடிமையாக ஏற்றுக்கொண்டனன். உயிர், பொருள், உடல் ஆகிய அவனால் தரப்பட்ட அனைத்தையும் அவற்றாலாம் பயன் எய்தியதும் ஆண்டவன் ஏற்றுக்கொண்டனன். அத்திருவருளின் மெய்ம்மையினை நோக்கின் தந்த சிவனே மீண்டும் ஏற்றுக் கொள்வதால் கொண்டான் என்று கூறவும் ஒண்ணாது. இஃது ஒரு பொருளை இரவலாகப் பெற்றவன் மீட்டும் அப் பொருளால் ஆம் பயனை மட்டும் அடைந்துகொண்டு அப் பொருளைப் பழுதில்லாமல் ஈந்தார்பால் செப்பும் உளமகிழ்வுடன் ஒப்புவிப்பதை ஒக்கும். இஃது,

'இரவற் பொருட்பயனை எய்தியின் புற்றார்
குரவனடிக் குய்ப்பரன்பு கொண்டு."

என்பதனாலுணர்க.

(அ. சி.) கொண்டான் - அடிமை கொண்ட சிவன். அடிமை - ஆட்கொள்ளப்பட்ட சீவன்.

(7)