காலத்தில் அஃதாவது வாயு வலது மூக்கில் சரிக்கும் காலம். செய்க...வே. இடைகலையில் வாயுவை விடாது பிங்கலையில் விடுக்க. (5) 1905. விடுங்காண் முனைந்திந் திரியங்க ளைப்போல் நடுங்கா திருப்பானும் ஐயைந்து நண்ணப் படுங்காதன் மாதின்பாற் பற்றற விட்டுக் கடுங்காற் கரணங் கருத்துறக் கொண்டே. (ப. இ.) பேரன்பாகிய காதன் மங்கையினிடத்து மகப்பேறு ஒன்றே கருதிச் சிற்றின்பப் பற்றுக்களை அறவே விட்டு விரைந்தோடும் உயிர்ப்பினை அமைதிப்படுத்திக் கரணங்களைத் திருத்திய கருத்துட்கொண்டு மன எழுச்சியுடன் நடுக்கமின்றிப் பொறிபுலன் பத்தும் ஒத்துப் பொருந்தக் கருப்பையில் விந்து விடும் முறைமையே விழுமிது என்க. காண்: முன்னிலை யசை. (அ. சி.) ஐயைந்து - ஐந்தும் ஐந்தும் பத்து - பொறியும் புலனுமாகிய பத்து. (6) 1906. கொண்ட குணனே நலனேநற் கோமளம் பண்டை யுருவே பகர்வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும்போதிற் கண்ட கரணமுட் செல்லக்கண் டேவிடே. (ப. இ.) சிறப்பெனக்கொண்ட நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் பெண்மைக்குணம் நான்கும், இயற்கையன்பு செயற்கை அன்புகளால் ஏற்படும் நன்மையும், மருவும் பருவமாகிய இளமையும் (பேரிளம்பெண்), மணந்த ஞான்றுள்ள கட்டுக்குலையா வடிவமும். மும்மையும் பயக்கும் செம்மை வாயாகிய பவழமும், மலைநேர் பொலியும் முலையும் வாய்ந்து திகழாநின்ற மங்கைநல்லாரை மருவிப்புணர அன்புள்ளத்தை இன்புறச் செலத்தும்போது கலவிமுறைகளை நன்கு கருதிச் செலுத்துவாயாக. (அ. சி.) கோமளம் - இளமை. (7) 1907. விட்டபின் கர்ப்பவுற் பத்தி விதியிலே தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதியே கட்டிய வாணாள்சா நாள்குணங் கீழ்மைசீர்ப் பட்ட நெறியிதென் றெண்ணியும் பார்க்கவே.1 (ப. இ.) மேலோதியவாறு கூடிக் கருப் பதித்தபின் கருப்பத் தோற்றமுறையானே பின் அம் மகவினுக்கு வரக்கூடிய காலக் கணக்குகளை நன்கு உன்னி, வாழ்நாள் நிலைமையும், சாநாள் நிலைமையும் சிறந்த குணனும், சிறவாக் குணனும், கீழ்மைக் குணனும் முதலிய எல்லாவற்றையும் தாங்கள் கூடிய கூட்டத்தாலும் ஓடிய உயிர்ப்பினாலும் உய்த்துணர்ந்து நோக்குதல் வேண்டும். பேறு - செல்வம். இழவு - வறுமை. இன்பம் - இன்பம். பிணி - துன்பம். மூப்பு - உயர்வு. சாக்காடு - இழிவு. (அ. சி.) கீழ்மை - தீநெறி ஒழுக்கம். (8)
1. பேறிழ. சிவஞானசித்தியார், 2. 2 - 6.
|