2870. கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுகின்றாற் போலல்ல நாதனார் பாரை கிடக்கப் படிகின்ற 1வாறன்றே. (ப. இ.) ஆருயிர்களின் எண்ணமாகிய சித்தம் குளம் என்பபடும். அக் குளத்தின்கண் விரிந்த அறிவாகிய கோரை எழுந்து கிடந்தது. ஆரைச் செடிபோன்று பின்னிக்கிடக்கும் ஆசை அவ் விரிந்த அறிவினை மறைத்துப் படர்ந்து மூடிக்கிடந்தது. குளத்தினிலுள்ள மீன்களைத் தனக்கு இரையாகத் தன் நன்மையின் பொருட்டு நாரையாகிய கொக்கு கவரக் கருதுகின்றது. அதற்குரிய செவ்வி பார்த்து அக்குளத்தில் தங்கியிருக்கின்றது. அதுபோன்று அல்லாமல் விழுமிய முழுமுதற் சிவன் ஆருயிர்களின் நன்மையின்பொருட்டே அவ்வுயிர்களின் உள்ளமாகிய வன்பாரையிடத்துச் செவ்விநோக்கிக் காத்திருக்கின்றனன். இவ்வுண்மை தெரிந்தால் அவரை அப்பொழுதே கூடி யின்புறலாம். நாரை உவமை மறுதலைப் பொருளின்கண் வந்தது; "மற்றாங்கே" 2 என்பது போன்று. (45) 2871. கொல்லைமுக் காதமுங் காடரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்கா தியங்கவல் லார்கட்கு ஒல்லை கடந்துசென் றூர்புக லாகுமே. (ப. இ.) பிறப்பினைக் கொல்லும் தலைமைப் பாடமைந்த 'ஓ' மொழி கொல்லை எனப்பட்டது. அவ் ஓ மொழிக்கண் அகர உகர மகரமாகிய மூன்றெழுத்தும் கூடியுள்ளன. அ + உ + ம் என்பது இரண்டரை மாத்திரைகளைக் கொண்டதாகும். அகர உகரம் குற்றெழுத்துக்கள். அவை இரண்டும் மூன்றும் மாத்திரை பெற்ற எழுத்தாகவேண்டுமாயின் ஒன்று நெடிலாதல்வேண்டும். எனவே உகரம் ஊகாரமாகக் கொள்ளுதலமையும். குற்றெழுத்தாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் ஒரு புடையொப்பாக முறையே வனப்பாற்றல், நடப்பாற்றல், அன்பாற்றல், அறிவாற்றல், உழைப்பாற்றல் எனக் கொள்க. இவ்வைவகையாற்றல்களும் ஆருயிர்களுடன் கலந்து தொழிற்படுத்து முறையினை நெட்டெழுத்தாகக் கொள்ளுதல்வேண்டும். அந்த முறையில் அ + ஊ + ம் = ஓம் என்றாகும். மந்திரமாதலின் (2751) மறைத்தும் குறைத்தும் கூட்டியும் கூறுதன் மரபு. இதன்கண் குறைத்துக் கூறப்பட்டது. 'சிவாயநம' என்பதன்கண் 'வா' கூட்டிக் கூறப்பட்டது. எனவே ஓ என்பது இருமாத்திரையாக இருப்பினும் மூன்று மாத்திரையாக அளபெடுத்து ஒலித்தல்வேண்டும். அப்பொழுது 'ஓஒ' என்றாகும.் இதுவே 'முக்காதம்' என மொழியப்பட்டது. காடாம் 'ம'கரம் அரைமாத்திரையாகும். திருவடி எல்லை காணவொட்டாது நன்னெறியும் புன்னெறியுமாகிய இருநெறிகள் மயங்கிக் கிடந்தன. இவ்விருநெறிகளையும் முறையே அருள் நெறியும் மருள்நெறியுமென்று கூறலாம். எல்லை மயங்காது அருள் நெறியில் ஒழுகவல்லார்கட்குத் திருவருட் பெருந்துணையால் நனிமிக
1. வினையென். 8. திருச்சதகம், 37. 2. கெடுப்பதூஉம். திருக்குறள், 15.
|