1169
 

நினைவாய் அவன் திருமுன் இருப்பாயாக. முன்னிருப்பதென்பது சிவபெருமான் எப்பொழுதும் நம்மகத் திருப்பதுபோல் புறத்தும் இருக்கின்றான் என்னும் எண்ணம் திண்ணமாகக்கொண்டு ஒழுகுதல். அவ்வாறு நினைப்பவர்தம் குறையாகிய இன்றியமையாமையுள்ள வேண்டுகோளை முடித்திட்டருள்வன். நினைப்பார் குறையை முடிப்பான் என்பதற்கு ஒப்பு, பக்கமிருக்கும் கைக்குடையை விரிப்பார்க்குத் தக்க நிழல்தரும் தன்மையாகும். அச் சிவபெருமான் நிலைபெற்ற கேட்டுய்வதற்கு வாயிலாகிய திருவைந் தெழுத்தாவன். விதிப்படி கணிக்கும் அவ்வெழுத்தின் பெறுபேறாம் பெருந்தவத் தோனும் ஆவன். ஆருயிர்களின் உச்சிக்கணின்று தெளிவிக்கும் தேற்றத்தனும் ஆவன்.

(4)

2816. மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலுந்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிபவன் என்விழித் 1தானன்றே.

(ப. இ.) திருவருளால் விளக்கமிக்க என் சிந்தையாகிய அகக்கண் திறக்கப்பட்டது. நான் விழித்து நோக்கினேன். நோக்கலும், தானே இயற்கை உண்மை அறிவுப் பிழம்பாயுள்ள சிவன் அடியேனைச் சிறப்பாக அறிவானாயினன். இது கற்பிப்பாரால் கற்பிக்கப்பட்ட மாணவரைத் தேர்வாளர் வந்து தேர்தல் புரிதலை யொக்கும். அச் சிவபெருமானே தலைவனாவன். அவன் ஒப்பில்லாதவன். செம்பொன் போலும் திருமேனியினையும், பின்னல் வாய்ந்த திருச்சடையினையும் உடையவன். அவன் என்னைச் சிறப்பாக உற்றறிபவனாவன். என்னையும் அவன் திருக்கடைக் கண்ணோக்கம் செய்தருளினன். அவன் நந்தி என்னும் திருப்பெயருடையவன். நந்தி நாமம் 'நமசிவய' என்பதனால், எல்லாம் அவனுடைமை என்பது விளங்கும். உற்று - நோக்கி.

(அ. சி.) மின்னுற்ற - விளக்கம் பொருந்திய. தன்னுற்ற - தானே விளங்குகின்ற. என் உற்று அறிபவன் - என்னையே உற்று நோக்குபவன்.

(5)

2817. சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தஞ்
சித்தத்தி னில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியந் துரியத்துள்
உய்த்த துரியத் துறுபே ரொளியன்றே.

(ப. இ.) தனிமுதற் பெரும்பொருள் சிவன். அவன் இயற்கை உண்மை அறிவு இன்பவடிவினன். சித்தமெனப்படும் இறுப்பின்கண் நில்லாத சிவப்பேரின்பப் பேரொளி. திருவருட் செயலறலாகிய துரியம் சுத்தப் பிரமத்துரியம் எனப்படும். அத் துரியத்துள் செலுத்திய மற்றோர் செயலறல் உய்த்த துரியமாகும். அத் துரியத்துள் மிக்க பேரொளியாக இருப்பவனும் அவனே. இத் துரியம் அருளோன் செயலறல் எனப்படும்.

(6)


பின்னுவார். அப்பர், 4. 45 - 8.

" பிணமுடை. " " " 7.