1228
 

2923. சந்திரன் பாம்பொடுஞ் சூடுஞ் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் 1தானன்றே.

(ப. இ.) ஆருயிர் நினைவாம் திங்களும், ஐம்புலன் நினைவாம் பாம்பும்,திருவருள் வெளியாம் சடைக்கண் அவற்றின் பிறப்புப் பகையை அகற்றி ஆருயிர் சிறப்புற ஐம்புலனும் துணையாக நிற்குமாறு பணித்தருளுபவன் சிவன். அக் குறிப்பே திங்களும் அரவும் சூடும் திருக்குறிப்பாகும். அத்தகைய திங்களும் பாம்பும் சூடும் திருச்சடையினைடையவன் சிவன். வலிய வந்து எளியேனை ஆட்கொண்டருளும் வரம்பிலா இயற்கைப் பெரும் பேரறிவுடைய மணி விளக்கானவன் சிவன். முடிவும் முதலுமில்லாத 'மாற்றம் மனம் கழிய நின்ற மறையோ' னானவன் சிவன். அத்தகைய அரும் பெரும் பொருளாகிய அவன் 'யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்' 'யாவர்க்குங் கீழாம் அடியேனை' ஆட்கொண்டு அடியேன் எண்ணத்தின்கண் வண்ணமுற வீற்றிருந்தருளினன். அதனால் அடியேன் யான் எனது என்னும் செருக்காகிய தியக்கை அறுத்தனன். திருவடி முயக்கை உறுதல் உற்றேன்.

(7)

2924. பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்குங் கருத்தறி வாரில்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாயிடில்
துண்டங் கிருந்ததோர் தூறது 2வாகுமே.

(ப. இ .) சிவபெருமான் தொன்மைக்கண் படைப்பாதி ஐந்தொழிலைக் கூட்டொருவரை வேண்டாக் கொற்றவனாய் நின்று திருவருள் வழியாகத் திருவுள்ளத்தளவானே புரிந்தருள்வன். அக் காலத்து நெடுமால் பிரமனையும் வடுவிலா அவனே படைத்துக் காத்தருள்வன். ஊழிக்காலத்து அவர்களையும் ஒடுக்கி மீண்டும் படைத்தருள்வன். இவ் வுண்மையினை அறிவார் அரியர். அங்கு விண்டுவாகிய மேகம்போற்றோன்றும் திருவடிப் பேரின்பப் பெரு வெள்ளத்தின்கண் உள்ளம் பதிதல் வேண்டும். அங்ஙனம் பதிதற்கு வேறு எதனையும் எண்ணாத திண்ணஞ் சேர் எண்ணம் வேண்டும். அதுவே வெறுமனம். அதுவே தூயவிருக்கை. அந் நிலை எய்தினால் அனைத்துலகினுக்கும் அப்பாலாய்ப் பொருள் தன்மையில் துண்டாக நிற்கும் சிவபெருமான் கலப்புத் தன்மையில் ஒன்றாய் உடனாய் ஒருங்கிருப்பன். அத்தகைய தூய வுள்ளப் பள்ளியறை அவனுக்குத் தூறாகிய இருக்கையாகும்.

(அ. சி.) கண்டு - படைத்து. விண்டு - சிவானந்தம்.

(8)


1. தேனுங் 12. கூற்றுவ, 9.

" கந்தமலர்க். அப்பர், 6. 84 - 4.

" பேணத். 8. திருக்கோவையார், 215.

2. இலயித்த. சிவஞானபோதம், 1. 2 - 1.

" பெருங்கடன். அப்பர், 4. 113 - 4.

" உணர்ந்தார்க். 8. திருக்கோவையார், 9.