4. தக்கன் வேள்வி 339. தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.1 (ப. இ.) தக்கனின் தந்தையாகிய நான்முகனுக்கும் முதல்வன் சிவபெருமான். தக்கன் பிழைபடச் செய்த புலைவேள்வியினை யுன்னிமனத்திற் கொள்ளும் பொல்லாங்குச் சூடாகிய வெகுளியைச் சிவன் கொண்டனன். அவ் வெகுளி முகத்துத் தோன்றினால் சினம். அது சொல்லாக வெளிப்பட்டால் சீற்றம். செயலானால் செற்றம். மாறா திருந்தால் வன்மம் அண்ணலாகிய சிவபெருமான் சினங்கொண்டபோதே வேள்வித் தீயினைத் சூழவிருந்த விண்ணவர்கள் நடுங்கினர். முந்திய பூசையாகிய தகர் தின்னும் தொழில் முற்றும் முடியாதிருக்கும்போதே ஒருவர் போன இடம் ஒருவர்க்குத் தெரியாமலே ஓட்டெடுத்தனர். (1) 340. சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும் எந்தை யிவனல்ல யாமே உலகினிற் பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய அந்தமி லானும் அருள்புரிந் தானே. (ப. இ.) வயனங்கள் மாறா வடுவாகிய தண்டனை பெற்றுத் துன்புறும் விண்ணவருள் தலைமைப் பாடமைந்த அரியாகிய மால் மன்னிப்பு வேண்டுதலாகிய சந்தி செய்வானாயினன். எந்தையாகிய சிவபெருமானே! இத் துன்பத்திற்குக் காரணம் புல்லறிவு படைத்த தக்கன் மட்டுமல்லன். யாங்களும் மலமயக்கால் உலகினில் பிணிப்புண்ணும் பாசத்தில் வீழ்ந்து (துன்புறுவோமாயினம்). எங்களைக் காத்தருள வேண்டுமென்று தவஞ் செய்தனர். என்றும் முடிவிலாது ஒன்றுபோல் நின்று நிலவும் சிவபெருமானும் அத்தவத்திற்கு இரங்கி அருள் புரிந்தனன். வீழ்ந்து - அழுந்தி. (2) 341. அப்பரி சேயய னார்பதி வேள்வியுள் அப்பரி சேயங்கி அதிசய மாகிலும் அப்பரி சேயது நீர்மையை யுள்கலந்து அப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே. (ப. இ.) மேலோதியவாறு அயன் மகனும் தலைமைப்பாடும் உடைய தக்கன் செய்த தீ வேள்வியுள் வியக்கத் தகுந்ததாக விளங்கும் அங்கியாகிய தீயும் வேண்டிக்கொள்ளச் சிவபெருமான் அதனையும் ஏற்றுக் களித்து அருள் செய்தனன். (3)
1. சாவமுன். 8. திருச்சதகம், 4.
|