350. தண்கடல் விட்ட தமரருந் தேவரும் எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர் விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங் கண்கடல் செய்யும் கருத்தறி யாரே. (ப. இ.) சிவபெருமானின் திருவாணையால் விண்ணளவும் நண்ணி எல்லாரையும் அச்சுறுத்திய பெரு வெள்ளமாகிய குளிர்ந்த கடலும் அடங்கிற்று. வானவர்களாகிய அமரரும் தேவரும் அளவில்லாத கடல் போலும் அன்பர்தம் காதல் எண்ணங்களால் சூழப்பட்ட இன்பவடிவினனாகிய எம்பெருமானே என்று இறைஞ்சுவாராயினர். கடலின் பெருக்கினை விண்ணளவும் வரச் செய்த சிவபெருமான் அதன்மேல் பேரொளியாய் எழுந்தருளினன். அவன் ஆருயிர்கட்குத் திருவடியுணர்வாகிய சிவஞானத்தை அருள்புரிந்தனன். இத்தகைய அவன் திருவுள்ளத்தை யாரும் அறியார். கண்கடல் - கடல்போன்ற சிவஞானம். கருத்து - திருவுள்ளம். (அ. சி.) எண்கடல் - கடல்போன்ற எண்ணங்கள். விண்கடல் - விண்ணை எட்டும்படியான வெள்ளப் பெருக்கு. கண்கடல் - பெரிதாகிய ஞானக்கண். (3) 351. சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே1 திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. (ப. இ.) எல்லாவற்றையும் திருவுள்ளத்தான் சமைக்கவல்லவன் சிவபெருமானே. அவனைத் தானே தன்னருளால் தோன்றியருளும் தனி முதலாகிய சயம்பு என்பர். சயம்பு - தான்தோன்றி. அச் சிவபெருமானை முன்னை நற்றவத்தாலன்றித் தனி முதலென்றேத்தித் தம் நெஞ்சத் தாமரையில் அமைக்கவல்லார் வேறு யாருளர். அனைவரும் கலக்கமெய்தி அஞ்சி ஓடும்படி ஊழிக்காலத்து மிக்கெழும் ஓவா தொலிக்கும் ஓசையோடு கூடிய கடலை ஏனைக் காலத்து மிக்கு எழாதிருக்கும்படி அக் கடலின் நடுவாக வடவைத் தீயைச் சிவபெருமான் அமைத்தருளினன். வடவைத்தீ - பெருந்தீ. வடம் - பெரிது. 'ஆழாழி கரையின்ழி நிற்க இலையோ' என்பதும் திருவாணையின் சிறப்பேயாகும். 'நீரே அருளாகும் நீருள் ஒடுங்குந்தீச் சீரே சிவபெருமான் தேருங்கால் பாரேயும், ஆவிகளைக் காக்க அடங்குந்தீ ஆணையினால், மேவுமேல் போக்க விரைந்து.' என்பதனை நினைவு கூர்க. (அ. சி.) சமைக்க வல்லான் - ஆக்கி அளித்துத் துடைக்கவல்லான். அமைக்கவல்லார் - மனத்தில் இருத்தித் துதிக்கவல்லார். (4)
1. என்ன புண்ணியஞ். சம்பந்தர், 2. 106 - 1.
|