162
 

இருக்கும்? சக்கரம் மறைந்ததும் திருமாலுக்குச் செருக்கும் மறைந்தது. மால் சிவபெருமானைத் தொழுது வேண்டினன். திருவெள்ளிமலையில் வீற்றிருக்கும் ஆபதியாகிய பசுபதி ஏழுலகத்தாருக்கும் நல்வாழ்வு அருளினன். அவ்விடத்து மாலுக்கும் அவனிழந்த சக்கரத்தை யருளினன். கால்போது - மேலிட்ட காலத்து. காலுதல் - வளிவருதல். ஆபதி என்பதற்கு ஆனேற்றை ஊர்கின்ற சிவன் எனலும் ஒன்று. சிவபூசையிற் கொள்ளும் மாலும் அயனும் தூமாயையிலுள்ளவர்.

(அ. சி.) போதகன் - குரு ஏழு குருக்களில் ஒருவர் மால். ஏனையோர் :- சதாசிவன் - அநந்தன் - நீலகண்டன் - அம்பிகை கந்தன் - அயன்.

(1)

354. சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
ஈக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.

(ப. இ.) சிவபெருமான் திருவருளால் மாலின் கையில் சக்கரம் வந்தமர்ந்தது. அச் சக்கரத்தைத் தாங்கும் வலிமை திருமாலுக்கு இல்லை அதனால் யாவர்க்கும் மிக்கானாகிய தக்க சிவபெருமானை வலிமை வேண்டி மால் அன்புடன் பூசித்தனன். தாங்கும் வலிமையையும் உதவியருளினன் சிவன். அச் சத்தி சிவனின் வேறல்லாத் திருவருளே. தக்க நற்சத்தி - தனக்குரிய வலிமையை. கூறு செய்தது - பகுந்து கொடுத்தது. தாமோதரன் - கடைக்குணம் நிரம்பிய வயிற்றினன்.

(2)

355. கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.1

(ப. இ.) சிவபெருமான் தனது ஆற்றலின் கூறாகச் சக்கரத்தைப் படைத்தருளினன். கூறு - அமிசம். அச் சக்கரத்தை மாலுக்கு உரிமை செய்து கொடுத்தருளினன். கூறு - பங்கு. தன் திருவருள் ஆற்றலுக்குத் தன்னையே கூறுசெய்தளித் தருளினன் சிவன். அத் திருவருளையே தனக்குப் படைக்கலமும் திருவுருவுமாகக் கொண்டருளினன். சிவபெருமான் தன் திருமேனியில் ஒருகூறு திருவருளுக்குக் கொடுத்தருளினன் என்றலும் ஒன்று. கோலம், படை எனக் கூறுதலும் ஒன்று.

(3)

356. தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.

(ப. இ.) செருக்குற்றுப் புலைவேள்வி செய்த தக்கன் வேள்வியை அழித்தொழித்த வாட்கைவீரர் வீரபத்திரர் என்ப. அவ் வாட்கை


1. உருவருள். சிவஞான சித்தியார், 1 . 2 . 19.