(ப. இ.) திருவருளால் பதினைந்து மெய்களால் விளங்கும் பருஉடல் உணவின் காரியமாகும். அது வேண்டுமளவு கரைந்து கருவில் சேர்ந்து பதியும். பின்னர் அஃது உருவாய்த் திரண்டு ஓங்கும். அங்ஙனம் திரண்டு உருவாவதற்குக் கடல் நீரிலுள்ள உப்புத்திரண்டு வேறாகுவதே ஒப்பாகும். அங்ஙனம் திரித்துப்பிறப்பிக்கும் செயல் அனைத்தும் திருவருளின் திருவுள்ளத்தால் நிகழ்வன. திருவுள்ளம் - சங்கற்பம். (அ. சி.) திரித்து - மீண்டு. (39)
15. மூவகைச் சீவவர்க்கம் 475. சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி ஒத்த இருமாயா1 கூட்டத் திடைபூட்டிச் சுத்தம தாகுந் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவமய மாக்குமே. (ப. இ.) திருவருட் பெருந்திருவாம் சத்தியுடன், அத் திருவினை விட்டு நீங்கா மரமுங் காழ்ப்பும் போல் உரம்பெற்று என்றும் வரமருளும் சிவபெருமானும் ஆருயிர்கள் உய்தற்பொருட்டு ஐந்தொழில் புரியத் திருவுள்ளங் கொண்டருளினன். இத் திருக்குறிப்பே விளையாட்டென ஓதப் பெற்றது. ஆருயிர்கட்கு மல மகற்ற உடலைப் படைத்தருளினன். அவ்வுடலுடன் உயிரை இணைத்தருளுவதையே உயிராக்கி என ஓதினர். அழுக்ககற்றத் துணைபுரியும் தன்மையிலும் அகற்றவேண்டுந் தன்மையிலும் ஒத்த பான்மையுடையன மாயைகள். அம் மாயை தூமாயை எனவும் தூவாமாயை எனவும் இருவகைப்படும். மல கன்மங்களுடன் விரவியது தூவாமாயை. மல கன்மங்களுடன் விரவாதது தூமாயை. இவ் விருமாயைகளும் சேர்ந்ததே அரும்சைவர் தத்துவமாகிய முப்பத்தாறு மெய்களும். அவற்றுள் முப்பத்தொரு மெய்களும் தூவாமாயை எனப்படும். இவை உருவுடல் அருவுடல் மருவுடல் கருவுடல் என நால் வகைப்படும். இவற்றைத் தூலவுடல் சூக்குமவுடல் கஞ்சுகவுடல் காரணவுடல் எனக் கூறுப. உருவே அருமரு வொண்கருமெய் நான்கும் பருமைநுண் போர்வை முதற் பாப்பு என நினைவு கூர்க. இவ்விருமாயையும் பகுப்பால் இரண்டுபட்டதேனும் பொருளால் ஒன்றேயாம். இவற்றுடன் இணைத்து நடப்பாற்றலால் ஊட்டி நடத்துவிப்பன். தூய்மை எனக் கூறப்படும் பேருறக்கமாகிய துரிய நிலையில் மலமகற்றிச் சித்தமாகிய எண்ணத்தின்கண் சிவபெருமான் புகுந்தருள்வன். புகுந்து அவ்வுயிரைத் தன் வண்ணம் ஆக்கியருள்வன். விளையாட்டு - எண்ணத்தாலியற்றும் எளிமை. ஊட்டி - வினைப்பயனை நுகர்வித்து. சிவமயம் - சிவநிறைவு. (அ. சி.) இருமாயா - சுத்தமாயை - அசுத்த மாயை. (1)
1. மலமாயை. சிவஞானசித்தியார், 2. 4 - 16. " செறிகழலு. அப்பர், 6. 18 - 8.
|