(ப. இ.) திருவருளம்மையின் திருவடியைக் கழியாகக் காதலுடன் உள்ளத்தில் வைத்தலும், தலை முதலிய உறுப்புக்களின் வைத்தலும், கண்முன் நிறுத்தலும், மூலத்துவைத்தலும், பழிபாவங்களைச் சிறிதும், நாடாத நாட்டமாகிய சிந்தையுள் வைத்தலும் செய்து திருமுறை நூல்களைப் பண்ணொடும் ஓதி அமைதி வடிவாய் இன்புற்று வாழ்வீராக. சிரசாதி என்பது சிராதி எனத் திரிந்துநின்றது. (அ. சி.) சிராதி - சிரசு முதலிய உறுப்புகளில். நிந்தை - மறதி. சந்தை - உருப்போடல். (47) 1178. சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச் சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை நவாதியி லாக நயந்தது ஓதில் உவாதி அவளுக் குறைவில தாமே.1 (ப. இ.) சமாதியாகிய ஒடுக்கத்தில் பயில்வார்க்குத் திருவருளம்மையே முதல்வியாவள். அவள் விற்போலும் நெற்றியை உடையவள். அவளே சிவத்தில் பொருந்தியிருப்பவள். ஒன்பது திருவுருவங்களாகக் கோலங்கொண்டு அருள்செய்யும் அம்மையும் அவளே. அவ் வுருவில் விரும்பியதொன்றை வழிபடில் அத் திருவுருவே எவ்வகைத் திரிபுமில்லாத அம்மை அருள்புரிவதற்காம் உறையுள் என்ப. உறைவிலதாமே. உறைவு இல் அது ஆமே: உறையுமிடம் அது ஆகும். (அ. சி.) சிவாதி - சிவத்தில். நவாதி - ஒன்பது முகூர்த்தங்கள். உவாதி - விகாரம். (48) 1179. உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும் இறைதினைப் போதினில் எய்திட லாமே. (ப. இ.) திருவருளம்மை உயிர்கள் உய்தற்பொருட்டு, அகத்துப்போல் புறத்தும் திருக்கோவில் கொண்டெழுந்தருளியுள்ளாள். அத் திருக்கோவில் தோறும் முறைமுறையாகச் சென்று மணம் கமழ்கின்ற பூச்சூடியுள்ள அம்மையை நாடொறும் கும்பிட்டு 'நமசிவய' என்னும் தமிழ்மந்திரம் மறவாநினைவுடன் ஓதிக்கொண்டிருக்கும் மெய்யடியார்கட்குத் தூமாயையின் கண்ணுள்ள ஏனைய அத்தன், அருளோன், ஆண்டான், ஆசான் ஆகிய நான்குமெய்களின்கண் உறையும் இறைவன் திருவருளும் தினைப்பொழுதினுள் எளிதின் எய்தும். (49) 1180. எய்திட லாகும் இருவினை யின்பயன் கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி மைதவழ் கண்ணிநன் 2மாதுரி கையொடு கைதவம் இன்றிக் கருத்துறும் வாறே.3
1. சத்தியாய். சிவஞானசித்தியார், 2. 4 - 3. (பாடம்) 2. மாரிதுர்க் கையொடு 3. தூயானைச். அப்பர், 6. 50 - 4.
|