479
 

1206. சத்தியும் நானுஞ் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதலறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கான்
மத்தியி லேற வழியது வாமே.

(ப. இ.) சத்தியாகிய பேரறிவுப் பேராற்றலும், ஆவியும், ஆண்டானும் ஆகிய இவை அல்லாது, முத்திக்கு யாரும் காரணமாகுவாரிலர். உடம்புக்குள் உயிரினை இணைத்துவைக்கில் அவ்வுடம்பு முதிர்ந்தால் நடுத்தண்டின்வழியாகச் சென்று உயிர்ப்பு உயரும். உயிர்ப்பு - பிராணவாயு. அத்தி - அகரம். வித்து - மகரம். மத்தி - புருவநடு எனக் கூறலும் ஒன்று.

(அ. சி.) நானும் - சீவனும். அத்தி - சரீரம். வித்து - உயிர். அத்தி பழுத்தால் - சரீரம் பண்பட்டால். மத்தியில் - வீணாத் தண்டூடே.

(76)

1207. அதுவிது வென்றவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே.1

(ப. இ.) ஒருநெறிப்படாது அது வழி என்றும், இதுவழியென்றும் மயங்கி வீண்காலம் போக்காது, தேன்வழியும் பூச்சூடியுள்ள கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய திருவருளம்மையைத் திங்கள் மணடிலத் தமிழ்வழியேசென்று வணங்கவல்லார்க்குப் பிறப்பு இறப்புக்கு உட்படுத்தும் விதிவழியையும் வென்றிடுதல்கூடும்.

(அ. சி.) பதிமது - சந்திர மண்டலத்தமுது. விதிவழி - வல்வினை.

(77)

1208. வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

(ப. இ.) விதிவழியை வெல்லுவதும், இருவினைப் பாசத்தை வெல்லுவதும், நிலையாப் பொருளை விரும்பும் ஐம்புலன்களை வெல்லுவதும் இயல்பாகவே பொறிவாயில் ஐந்தவித்த பொற்புடைய திருவருளம்மையை வழிபட்டு அவளருளும் திருவடியுணர்வாகிய மெய்யுணர்வினாலாகும். 'அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்பது, இதற்கொப்பாகும்.

(அ. சி.) வென்றிடும் - மேன்மை பொருந்திய.

(78)


1. அனுசயப்பட். அப்பர், 5.65-6.

" அதுவிது. சிவஞானபோதம், 12. 4-1.

" கூற்றம். திருக்குறள். 269.