480
 

1209. ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரங் குழலாளும் அப்பதி தானுமுன்
சாரும் பதமிது சத்திய மாமே.

(ப. இ.) மிகப் பழங்காலத்துத் தமிழ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாக வழங்கப்பட்டன. அதற்குரிய தெய்வங்களும் ஐம்பத்தொருவராவர். அவருள் ஒன்றிநின்றதும் அம்மையின் மெய்யுணர்வேயாகும். இம் முறைமை வழி வழியாக வருவது. கடவுளும் அங்ஙனம் வந்ததாகும். கோடகசாலையின் மலர்சூடிய கூந்தலையுடைய அம்மையும் அவள்தன் கணவனாகிய சிவபெருமானும் வந்துபொருந்தும் நிலையும் இதுவேயாகும். இஃது உண்மையாகும் மாரம்-கோடகசாலை.

(அ. சி.) ஓர் ஐம்பதின்மர் - 51 அக்கர அதி தேவர்கள். பாரம்பரியம் - பரம்பரை.

(79)

1210. சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது வின்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்
சித்தது மேவித் திருந்திடு வாரே.

(ப. இ.) சத்தியாகிய-முப்பத்தைந்தாம் அன்னைமெய்யினை முப்பத்தாறாவதாகிய அத்தன்மெய் நேர்படுதலாகிய நோக்கம்கொண்டதனால் வேறு காரணம் ஏதும் இன்றி ஐம்பத்தோரெழுத்துக்களும் தோன்றின. தோன்றவே அவற்றிற்குரிய கடவுளரும் தோன்றினர். இக் கடவுளரும் சித்தாகிய அறிவினை மேவிச் செம்மையுறுவர். உரிய கடவுளர் - அதி தெய்வம்.

(அ. சி.) சயம்பு - சிவன்.

(80)

1211. திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விடம் ஆரமு தாக
இருந்தனள் தானங் கிளம்பிறை என்றே.1

(ப. இ.) இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதலே திருந்துதலாகும். அங்ஙனம் திருந்திய சிவனும், சிலையாகிய விற்போலும் நெற்றியினையுடைய அம்மையும் எழுந்தருளியிருக்கும் வெள்ளிமலையிற் சென்று வானவர்கள் போற்றி முறையிட்டுத்தொழ ஆண்டவன் அக்கொடிய நஞ்சினை எடுத்து அருந்தவும், தேவர்கள் அமிழ்தத்தையுண்ணவும் திருவருளம்மை ஆரருள் புரிந்தனள். பொருந்திய: வீற்றிருக்கும் திரு வெள்ளிமலை.

(அ. சி.) அவ்விடம் - வலிய ஆலகால விடம்.

(81)


1. பருவரை. அப்பர், 4. 14 - 1.

" வேத. சம்பந்தர், 3. 108 - 1.

" ஆலமே. 12. சம்பந்தர், 740.