மெய்யுணர்வாகிய பராவித்தையாகும். அதுவே மீளாப் பேறளிக்கும் பெருநிலையாகும். அதுவே வேண்டும் சித்தியுமாகும். ஒரே திருவருளே சிவகுருவாகத் தோன்றுவள். சிவயோகம் எட்டும் அத் திருவருளேயாம். (அ. சி.) சிவகுருயோகம் - சிவராசயோகம். எட்டாமே - எட்டு யோகங்களாமே. (3) 1285. எட்டா கிய1சத்தி எட்டாகும் யோகத்துக் கட்டாகு நாதாந்தத் தெட்டுங் கலப்பித்த தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்தது கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே. (ப. இ.) திருவருளாற்றல் எட்டாகும். அதுவே சிவயோகம் எட்டாகும். உறுதியாகிய ஓசையாகிய நாதமுடிவில் எட்டுயோகங்களையும் ஒன்றாகச் செய்ததும் அத் திருவருளே. அவ்விடத்துக் கலவாத விந்துவும் தானில்லாது அடங்கிற்று. இத்தகைய பேறுகள் அறிவிலாக் கீழோர்க்குக் கிடையாது ஒழிந்தன. (அ. சி.) எட்டாகிய - அடையப்படுவன ஆகிய. கட்டாகும் - உறுதியுடையதாயிருக்கும் தொட்டாத....மூடர்க்கே - விந்துவை வீணாகக் கழியவிட்ட மூடர்க்கு எட்டுச் சித்திகளும் கிட்டாது ஒழிந்தது ஆகும். (இது விந்துவைக் கட்டினால் எல்லாம் சித்திக்கும் என்றது.) (4) 1286. ஏதும் பலமாக மிந்திரா சன்னடி ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச் சாதங் கெடச்செம்பிற் சட்கோணந் தானிடே.2 (ப. இ.) பயனுறத் திங்கள் மண்டிலத்திறைவன் பாதம் ஓதிக் குருவின் அருமறையாகிய உபதேசத்தையும் உட்கொண்டு நீ அதற்கு வேண்டும் உறுப்புத்தொடுதல் கைவிரல் தொடுதல் முதலிய செயல்களைச் செய்து பிறப்பு நீங்கும்படி செப்புத்தகட்டில் அறுகோணம் வரைவாயாக. சிவதீக்கையிற் கண்டபடி திருவங்கமாலையினை ஓதி உறுப்புத்தொடுக. (அ. சி.) இந்து இராசன் - சந்திர மண்டலத்து அதிபதி. தங்கு மங்க நியாசம் - கரநியாசம் அங்கநியாசங்களை. சாதம் - பிறப்பு. செம்பில் தாமிரத்தகட்டில். சட்கோணம் - அறுகோணம். (சடு - ஆறு) (5) 1287. சட்கோணந் தன்னில் சிரீம்ஹிரீம் தானிட்டு வட்கோண மாறின் தலையில்ரீங் காரமிட்டு எக்கோண முஞ்சூழ எழில்வட்டம் இட்டுப்பின் மிக்கீரெட் டக்கர மம்முதன் மேலிடே.
(பாடம்) 1. சித்தி. 2. அஞ்செழுத்தா. சிவஞானசித்தியார், 99. 3 - 2. " மந்திரங்க. 12. சம்பந்தர், 266.
|