1404. சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ் சத்தும் அசத்துந் தணந்த பராபரை உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை அத்தன் அருட்சத்தி யாயெங்கு மாமே. (ப. இ.) அசுத்தமாகிய புலம்பின்கண் நனவு கனவு உறக்கம் என்னும் மூன்றும், சுத்தமாகிய புரிவின்கண் நனவு கனவு என இரண்டும், பேருறக்கம் உயிர்ப்படங்கல் என்னும் இரண்டும் ஆகிய ஏழும், நிலைப்பதாகிய காரணமாயையும் நிலையாததாகிய காரிய மாயையும் நீங்கிய பராபரையாகிய திருவருள் ஆருயிரோடு பொருந்தியும் உயிர்க்கு உயிராகியும் நிற்பவளாவள். அவளே அத்தன் அருளாற்றலாகிய அன்னையாவள். அவளே எங்கும் நிறைந்து நின்று எவற்றையும் இயக்குபவளாவள். புலம்பு - கேவலம். புரிவு சுத்தம். உள் - உயிர்க்குயிர். (அ. சி.) தணந்த - நீங்கின. உள்ளாம் பராபரை - ஆன்மாவுக்கு உள்ளிருந்து நடத்தும் சத்தி. (3) 1405. சத்தும் அசத்துந் தணந்தவர் தானாகிச் சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் சித்தியு மங்கே சிறந்துள தானே.1 (ப. இ.) சத்து அசத்துக்களாகிய காரண காரிய மாயைகளை மலமற்றமையால் வேறுபடுத்துணரும் இயல்பு அகன்றவராவர். சிற்றுணர்வும் சுட்டுணர்வும் இல்லாச் சிவனிறைவில் அடங்கிச் சிவனே தானாகி வீடுபேற்றின்கண் இறவாத இன்ப இறைவியுள் அடங்கினவராவர். அவர்க்குப் பெரும்பேறும் சிறந்து விளங்கும். சிவ + அகம் = சிவோகம்; சிவநிறைவில் உறைதல். (அ. சி.) சிவோகமாய் - சிவமே ஆய். (4) 1406. தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. (ப. இ.) உண்மைச் சைவர்கள் உள்ளுற நினைத்து மேற்கொண்டு ஒழுகவேண்டிய வழிவகையான பொருள்கள் எட்டு. அவை : ஆருயிர், இயற்கைப் பேரறிவுப் பெரும்பொருள், அருளோனாகிய சதாசிவன், இறை, உயிர் தளை, தொன்மையாகிய ஆணவமலம், வீடுபேறு என்பன. (அ. சி.) தன்னை - ஆன்மாவை. முன்னை அநாதியேயுள்ள. முன் கட்டை - அநாதியே ஏற்பட்ட ஆணவக் கட்டை. (5)
1. அறிவரியான். சிவஞானசித்தியார், 12. 3 - 1.
|