8. ஞானம் (மெய்யுணர்வு) 1440. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.1 (ப. இ.) திருவடியுணர்வாகிய ஞானத்தின் மிக்க பிறப்பறுப்பதாகிய அறநெறி எந்நாட்டினும் இல்லை. ஞானத்தின் வேறான சமயமும் இம்மை உம்மை அம்மை என்னும் மூவிடத்து நன்மையுள் ஏதும் தருவதின்று. அதனால் அக் கோட்பாடு நன்மையுமாகாது. ஞானத்திற்குப் புறம் பாயுள்ளவை நல்ல வீடுபேற்றினைத் தாரா. சிவஞானத்தாற் சிறந்தோர் மாந்தரிற் சிறந்தோராகிய அந்தண்மெய்யடியாராவர். (அ. சி.) நாட்டில்லை - நாட்டில் இல்லை. மிக்க - வேறான - மிக்கார் - சிறந்தவர். நரரின் - மக்களில். (10) 1441. சத்தமுஞ் சத்த மனனுந் தகுமனம் உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ் சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. (ப. இ.) மிக்க வேகமாக யாண்டும் நிறைந்துள்ள ஒலி முதலாகிய நாதமெய்யும், அதுபோன்று பரந்த தன்மையுள்ள, மனமும், அம் மனம் பற்றி ஐயுற்ற பொருளை உறுதிசெய்வதாகிய இறுப்பு என்னும் புத்தியும், அப்புத்தியினை எழுப்புவதாகிய அகங்காரமும், தூக்கி எண்ணுவதாகிய சித்தமும் ஆகிய ஐந்தனுள் சித்தம் மனத்தின்கண் அடங்குவதாலும், நாதம் இவற்றைத் தொழிற்படுத்துவதாலும் ஏனைய மனம் அகங்காரம் புத்தி என்னும் மூன்றும் சிறந்தன. அவை முறையே நிகழ்த்தும் நினைப்பு எழுச்சி இறுப்பு ஆகிய அந்தக் கரணச் செய்கைகளும் நாதகலையும கடந்தவரே ஞானியராவர். அவர்கள் செல்லும் நெறியே மெய்ந்நெறியாகும். மெய்ந்நெறி - சன்மார்க்கம். (அ. சி.) இம் மந்திரம் அந்தக்கரணங்கள் சுத்தமாய் இருப்பதே சன்மார்க்க நெறி என்று கூறுகின்றது. (2) 1442. தன்பால் உலகுந் தனக்கரு காவதும் அன்பா லெனக்கரு ளாவது மாவன என்பார்கள ஞானமும் எய்துஞ் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. (ப. இ.) தான் சார்ந்திருக்கும் மாயாகாரியமாகிய நிலையுதலிலவாம் உலகமும், தன்னோடு தொடர்புடைய உடம்பும் நிலைபெற்ற திருவருளால் கிடைத்தன. இவற்றால் சிவபெருமானிடத்து நீங்காக் காதல்கொண்டு ஒழுகினால் அச் சிவத்துள் அடங்கித் தானே சிவமாகப் பொலிவன்
1. ஞானமெய்ந். 12 சம்பந்தர், 1248. " ஞானத். அப்பர், 5. 91 - 3.
|