உணராமையினால் உயிர்ப்பயன் எய்தார். பயன் எய்தாராகவே அறிவுடைப் பொருளுமாகார். மெய்ம்மை தெளியாதவர் சிவன் திருவடியிணையினைக் கூடிச் சிவமாம் பெருவாழ்வு எய்தார். மெய்ம்மை தெளியாதார் பிறப்பறார்; சிறப்பு உறார். (4) 1454. தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று மோனம தாமொழிப் பான்முத்த ராவதும் ஈனமில் ஞானாறு பூதியில் இன்பமுந் தானவ னாயுற லானசன் மார்க்கமே.1 (ப. இ.) சிவபெருமான் திருவருளால் ஆவி சிவமாகித் தொன்மையே ஒட்டிய ஆணவமும், அதனை அகற்றுதற்பொருட்டுத் தொடக்கமாகக் கட்டிய கன்ம மாயைகளும், மாயாகாரியமாகிய உலகுடல் உண்பொருள்களாம் மாயேயமும், இவற்றைத் தொழிற்படுத்துந் திருவருளாம் நடப்பாற்றலும் (திரோதானசத்தி) ஆகிய ஐந்து மலங்களையும் அகற்றி உணர்விற் கணிப்பதாகிய 'சிவசிவ' என்னும் செந்தமிழ்மறையே வாய்வாளா மோன மொழி எனப்படும். அம் மொழி பெற்றாரே வீடுபேற்றினராவர். அவரே குறைவில்லாத சிவஞானத் துய்ப்பினர். அவரே அச் சிவனடியின்பமும் தலைப்படுவர். இந்நிலையே தானவனாம் சன்மார்க்கமாகும். சன்மார்க்கம் - மெய்ந்நெறி; தெய்வச் சிவனெறி. (அ. சி.) ஐந்து ஆம் மலம் - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆக - 5. மோன...மொழியால். "சும்மா இரு சொல்லற" என்ற குருமொழியால். அனுபூதி - அனுபவம். (5) 1455. சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமுஞ் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தெரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.2 (ப. இ.) எவ்வகை நெறியினர்க்கும் இயல்பாகிய சிறந்த உண்மையினைக் கூறுகின்றேன். கேளுங்கள். மெய்ந்நெறியாகிய சன்மார்க்கநெறி நிற்பார்க்கு இணக்கம்சேர் நல்லார் கூட்டமும் அவர்கள் கூடிவாழும் இடமுமே சிறந்தன. அவர்கள் கூடியிருக்கும் இடமே சிவபெருமானை நோக்கி வழிபடும் திசையாகும். அவர்கள் இருப்பே சிவபெருமான் திருவுருவ இருப்பாகும். அவர்களே தெய்வமாகும். அவர்களைக் காண்பதே தெரிசனமாகிய காட்சியாகும். (அ. சி.) வருக்கம் - சங்கம். (6) 1456. சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க் காய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே.3
1. தன்னறி. சிவப்பிரகாசம், 8 - 2. 2. கைகள். 12. திருமலைச்சிறப்பு, 18. 3. சன்மார்க்கஞ். சிவஞானசித்தியார், 8. 2 - 12.
|