567
 

(ப. இ.) சன்மார்க்க சாதனமாகிய நன்னெறிப் பயிற்சியால் எய்துவன, திருவடியுணர்வும், அதனால் உணரப்படும் சிவமாம் பெருவாழ்வாம் திருவடியிணையும் என்ப. நன்னெறி எனினும் காதன்மை நெறி எனினும் ஒன்றே. அதன் வழிநெறியாகிய தோழமை, மகன்மை, தொண்டன்மை (அடிமை) என்னும் மூன்றும் பின்மார்க்கப் பயிற்சியாகும். இம் மூன்றும் முற்றா உரனுடைப் பேதையர்க்கு ஆவன. தீமை அனைத்தும் விட்டு நன்மையின்கண் தன்னிழப்பாகிய நெறியிற் செல்வோர், நான்காம் நிலையாகிய பேருறக்கமும் கடந்து அப்பால் என்று சொல்லப்படும் ஐந்தாம் நிலையாகிய உயிர்ப்படங்குதல் வழிநிற்பாராவர். தம் நிலையின் வழி நிலையாகிய நனவு கனவு உறக்கம் பேருறக்கம் முதலியவற்றைத் துரிசென்றே கொள்வர். அதுவும் நீங்கினோர் நன்னெறியாளராவர். அவர்கள் எய்தும் தனிப்பேறு தானவனாகும் தனிப்பெரும் வழியே. தானவன் எனப்து தன்னை அடிமை எனவும் சிவனை ஆண்டான் எனவும் கொண்டு தானற்று ஒழுகுதல். மெய்ந்நெறி என்றாலும் நன்னெறியென்றாலும் ஒன்றே.

(அ. சி.) பின் மார்க்கம் - சகமார்க்கம், புத்திர மார்க்கம், தாச மார்க்கம். துரியத் துரிசு - துரியாதீதத்துக்குக் கீழ்ப்பட்ட துரியம்.

(7)

1457. சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.1

(ப. இ.) நன்னெறியினைப் பெறவிரும்பிப் பேராக் காதலுடன் வரும் மெய்கண்டாராகிய மாணவர்க்கு, அதன் வழிநிலையாகிய பின் மார்க்கம் என்று சொல்லப்பெறும் செறிவு நோன்பு சீலம் என்னும் மூன்றும் அவர்கள் பயின்று அவர்களுக்குக் கைகூடினமையின் அஃது அவர்களுக்கு இயல்பாம் என்பர். இயல்பென்பது சித்தித்ததென்ாபதாகும். மேல் அவர்களுக்கு நிகழ வேண்டுவது இடையறாது சிவத்தை எண்ணுதலேயாம். எண்ணுதல் - நாடுதல், சிந்தித்தல். இதுவே அருமறை என்னும் திருவைந்தெழுத்து உபதேசமாகும். இத்தகைய திருமுறைத் தமிழாகமங்களை மேற்கொண்டொழுகுவதே (சுருதி - ஆகமம்) அந்நிலையாகும்.

(8)

1458. அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.2

(ப. இ.) தனக்கு வேறாய்த் தன்னை அடிமைப்படுத்தி தன்னுள் அடக்கும் ஆணவப் பழமலமாகிய அன்னிய பாசமும், அப் பாச ஆற்றலைத் தேய்த்து அடக்கும் மருந்தாகிய வினையும், அவ் வினை காரணமாக


1. பரிதி. அப்பர், 5. 94 - 5.

2. தெரிவரிய. சிவஞானசித்தியார், 11 - 4.

" நானவனென். சிவஞானபோதம், 10. 1 - 1.