திங்கள் முதலிய கிழமைகளும் சிறந்தனவாக நினைப்பவர்க்கல்லது அதன் முதலும் காரணமும் அறியவொண்ணாவென்க. (அ. சி.) சோதி - சுவாதி நாள். தேள் - விருச்சிகம். நண்டு - கடகம், ஓதிய நாள் - சொல்லப்பட்ட சுப வாரங்கள். ஆதியும் ஏதும் - முதலும் காரணமும். (5) 1667. தொழிலார மாமணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே விழலார் விறலாம் வினையது போகக் கழலால் திருவடி கண்டரு ளாமே.1 (ப. இ.) சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மை நற்றவத்தினின்று மனம்தனை மாமணிலிங்க வைப்பாகக் கொண்டு வழிபடச் சிவபெருமானும் அந் நெஞ்சத்திடமாக உறைந்தருள்வன். அவன் உறைந்ததும் பயனில் முயற்சிகளில் சென்று ஆணவ வலிமை கொண்டு திரியும் சிறப்பிலாருடன் சேரும் தீச்சேர்கை அகலும். அஃதகலும் பொருட்டுக் கழலணிந்த திருவடியைக் காண்பாயாக. காணவே அருள்நிறை வுண்டாகும். (அ. சி.) தொழிலார - சரியை முதல் நாற்பாதங்களிலும் சித்தி பெற்ற. விழலார் - சரியை முதலிய மார்க்கங்களை அனுசரியாத வீணருடைய. விறலாம்-வலிமை பொருந்திய. (6) 1668. சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி சாத்தவல் லானவன் சற்சீட னாமே. (ப. இ.) அறிவும் அமைதியுமாகிய தலைமைக்குணம் உடையனாய் உண்மைப்பொருளாகிய சிவனடியை மறவாமல் நினைந்து, கடவுள் உண்டெனுங் கொள்கை வேறுபாடுடைய நெறிகளின் அடிப்படைத் தோற்றத்தை மேற்கொண்டு, எல்லையின்றிப் பிணித்துவரும் பிறவியினுக்கு அஞ்சிச் செந்நெறியாகிய அறநெயின்கண் உறைத்துநிற்க வல்லான் நன் மாணவனாவன். (அ. சி.) சாத்திகனாய் - சத்துவகுணம் உடையவனாய். ஆத்திக பேத நெறி - கடவுள் உண்டென்னும் பல சமயங்கள். ஆர்த்த - பந்தித்த. சாத்தவல்லான் - கைக்கொள்ளவல்லான். (7) 1669. சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச் சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியில் இச்சைத் தகுவோன்சற் சீடனே.2
1. மறப்பித்துத். சிவஞானபோதம், 12. 2 - 1. 2. உணருரு. " 6. " யாவையும். " 7.
|