658
 

1674. வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

(ப. இ.) மறைமுடிவாம் வேதாந்தமென்பது இயற்கை உடைமையாகிய நில முதலியனவும், செயற்கை உடைமையாகிய உடை, உறையுள், ஊர்தி, ஒப்பனை முதலிய உடைமைகளும், உயிர்நிலையாகிய உடம்பும் என்னும் மூவகைப் பற்றுக்களும் விட்டநிலையாகும். இம் மூன்றனையும் மண், பொன், பெண் எனக் கூறுவர். புலன்வழிச் செல்லும் புன்னெறி வாழ்க்கையினை மாற்றி, அப் புலன்களை நலன்வழிச் செலுத்தும் சித்தாந்தத்து, உலகியல் வேட்கைவிட்ட வேதாந்தி முறையாக வந்து சேர்வன் . சேர்ந்து சித்தாந்தச் சிவகுருவின் பாதம் தலையினால்வணங்குவன். அவனே நன்னெறிசேர் நன்மாணாக்கன் ஆவன்.

(அ. சி.) வேட்கை - மூவகை ஆசைகள். வாழ்க்கைப் புலன் - உலக வாழ்வுக்கு ஆதாரமான இந்திரியங்கள். சித்தாந்தத்து வேட்கை விடுமிக்க வேதாந்தி - சுத்த அத்துவித சித்தாந்தத்திலே ஆசைகொள்ளும் வேதாந்தி. தாழ்க்கும் - வணங்கும்.

(13)

1675. சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே,1

(ப. இ.) நன்னெறி நன்மாணாக்கனுக்குரிய பத்துத் தன்மைகளும் முறையே வருமாறு: நற்பண்பு, வாய்மை, இரக்கம், நல்லறிவு, பொறுமை, குருவினடி நீங்காமை, உண்மையறிவின்பப் பெரும் பொருளுணர்வு, தெளிவு, ஓர்வு, அருள் நிகழ்ச்சி என்பன. இவை முற்றவுமுடைய மெய்யுணர்வினனே நன்மாணவனாவன். சற்சீடன் - நன்மாணவன்.

(அ. சி.) தயா - தயை, கருணை, இரக்கம். சாயைபோல் - நிழல் போல். தண்மை - பொறுமை.

(14)

ஆறாம் தந்திரம் முற்றும்.


1. பத்துக்கொ. அப்பர், 4. 18 - 10.