(அ. சி.) அந்த இரண்டு-நாத விந்துக்கள். கருவைந்து-ஐந்து மூர்த்திகள். செய்யும் அவை ஐந்தே-அம் மூர்த்திகள் செய்யும் தொழில்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்). (5) 1728. சத்திநற் பீடந் தகுநல்ல ஆன்மா சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுஞ் சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவஞ் சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே. (ப. இ.) சத்திவடிவாகக் கொள்ளப்படும் சிவலிங்கத்தினிடத்துப் பீடம் ஆவிநிலையாகும். கழுத்தினை ஒத்த பீடத்தின் குழி திருவடியுணர்வாகிய சிவஞானமாகும். மேல்தோன்றும் இலிங்கம், சிவமெய்யாகும். எவற்றினுக்கும் உயிர்க்குயிராம் பேராவி - பரமான்மா, சதாசிவமாகும். (அ. சி.) தகு நல்லவான்மா - சீவான்மா. சத்தி நல்லான்மா - பரமான்மா. (6) 1729. மனம்புகுந் தென்னுயிர் மின்னிய வாழ்க்கை மனம்புகுந் தின்பம் பொழிகின்ற போது நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும் இலம்புகுந் தாதியு மேற்கொண்ட வாறே. (ப. இ.) ஆருயிர்களின் உள்ளத்தின்கண் சிவபெருமான் திருவருளால் புகுந்து நிலைபெற்ற திருவடி வாழ்க்கையை அருளினன். அதனால் பேரின்பப் பெருவாழ்வு பொழிவதாயிற்று. அந்த இன்ப நன்மையின் நாட்டத்துடன் ஆருயிரையும் சிவனையும் அருளால் நாடுவர். அந் நாட்டப் பயனாக உடம்பாகிய வீட்டினுள் ஆதியாகிய சிவன் புகுந்து ஆண்டுகொண்டனன். (அ. சி.) இலம் புகுந்து - சரீரமாகிய வீடு. (7) 1730. பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்னடி யார்மனக் கோயிற் சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னு மராமரன் மன்னி மனத்துறைந் தானே.1 (ப. இ.) உண்மையறிவு இன்பப் பெரும்பொருள் பராபரன் என்று அழைக்கப்பெறும் அத்தகைய எந்தையாகிய சிவபெருமான் குளிர்ந்த ஆருயிராகிய திங்களைச் சூடினவன். தரைமுதலாகச் சொல்லப்படுகின்ற உலகங்களுக்கு இறைவன். தன் அடியாரின் முழு அன்பு மனத்தினைத் திருக்கோவிலாகக் கொண்டருளினன். அவனே முதற்கடவுள். அவனே ஆயிரவிதழ்த் தாமரையாகிய உச்சி நிலையத் திருப்பவன். தேவர்களுடைய முடியின்கண் வீற்றிருக்கும் (மராமரன், மரு + ஆம் + அரன்) மலர்மணம்
1. பாலை நகுபனி. அப்பர், 4. 17 - 8.
|