தனதாக்கொள்ளும் நிலைபெற்ற வனப்பாற்றலாகிய அம்மை பராசத்தியாகும். (அ. சி.) பாதி.....ஆமே-மாதொரு பாகன் ஆவான். (5) 1738. சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபதந் தோயாத தூவொளி அத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலாம் ஓத்தல ஆமீசன் தானான வுண்மையே. (ப. இ.) சத்தி தத்துவத்துக்கு மேல் விளங்கும் இயக்கநிலை அறிவுப் பேராற்றலாகிய பராசத்தியாகும். அப் பேராற்றலினுள் திகழ்வது இயற்கை உண்மைச் சிவனிலையாகும். அதற்குமேல் யாதினும் தோயாது அறிவுப் பெருவெளி நிற்கும். சிவபெருமானாகிய அத்தன் திருவடி எல்லாங் கடந்த இன்பநிலையம். அந்நிலையம் ஆற்றலாகிய சத்திக்கு இயைந்த அறிவாகிய சிவன் வீற்றிருந்தருளும் மெய்ம்மையாகும். ஆற்றல் - முடிவிலாற்றல். அறிவு - முற்றறிவு. (அ. சி.) சத்திக்கு மேலே - சத்தி தத்துவத்துக்கு மேலே. பராசத்தி தன்னுள் - பரை என்னும் சத்தி இடத்தில். சுத்த சிவபதம் - நின்மல சிவத்துக்கு இடம். தோயாத தூவெளி - யாதினும் தாக்கற்று நிற்கும் துய்ய சோதியாகிய சிவம். அப்பாலைக்கப்பாலாம் ஒத்தவும் - பராசத்தியோடு கூடியும் கூடாமலும். ஈசன் தானான உண்மை - சிவத்தின் உண்மை நிலை. (6) 1739. கொழுந்தினைக் காணிற் குவலயந் தோன்றும் எழுந்திடங் காணில் இருக்கலு மாகும் பரந்திடங் காணிற் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. (ப. இ.) முற்றறிவுப் பெருங்குறியாம் சிவக்கொழுந்து அருளாற் காணுந் தன்மைத்து. அங்ஙனம் காணப்பெற்றால் குவலயமாகிய உலகவுண்மைகள் தெற்றென விளங்கும். அச் சிவபெருமான் திருமேனி கொண்டு எழுமிடம் அறிவாற்றலாகிய திருவருளேயாம். இவ் வுண்மை தேறின் அம்மையப்பரை நினைந்து மறவாமல் இருக்கலுமாகும். பரமாகிய சிவபெருமானின் திடமெனப்படும் உண்மையை உணரின் அம்மையை ஒரு கூற்றிலே உடைய அப்பன் தோன்றும். பார்ப்பதி - அம்மை. அங்ஙனம் தோன்றும் சிவன் மெய்யடியார் எண்ணமாகிய சிந்தையுள் எழுந்தருளி நின்றனன். (அ. சி.) கொழுந்து - சிவக்கொழுந்து, அஃதாவது ஞானலிங்கம். எழுந்திடம் - பரை என்னும் சிற்சத்தி. பரம்திடம் - பரசிவத்தின் உண்மைநிலை. பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் - மாதொரு கூறனாகக் கண்டவன். (7) 1740. எந்தை பரமனும் என்னம்மை கூடமும் முந்த வுரைத்து முறைசொல்லின் ஞானமாஞ் சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியை உந்தியின் மேல்வைத் துகந்திருந் தானே.
|