761
 

சொல்லப்படுகின்ற இக்கூட்டத்தால் எழுந்து சொல்லுகின்ற சொல்கனத்த இரதமாகிய பயனில்லதாகும். இணைவிழைச்சு - ஆண்பெண் போகவிருப்பம்.

(அ. சி.) காமத்தை நாடினால் எல்லாம் வீண் என்பதைக் கூறிற்று.

(36)

1936. சத்தமுஞ் சத்த மனமும் மனக்கருத்
தொத்தறி கின்ற விடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற விடமறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடமும் அவ்விடந் தானே.

(ப. இ.) கண் நாக்கு மூக்குச் செவி மெய் என்னும் அறிதற்கருவி ஐந்தும் ஈண்டுச் சத்தமென்னும் சொல்லாற்பெறப்படும். அவ்வோசையினை வெளிப்படுத்தத் துணைபுரியும் மனமும், அம் மனக்கருத்து ஒத்து அறிகின்ற புலன்களும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்ந்து யார் இயக்க இயங்குகின்றன என்னும் இயற்கை மெய்ம்மையினை அறியார். உண்மைச் சிவனருளால் இவை இயங்குகின்றன என்று அறியவல்லார்க்கு அவ்வறிவாகவே அத்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருள்வன். அதுவே அவனது தூய இருக்கையாகும்.

(37)

1937. உரமடி மேதினி யுந்தியி லப்பாம்
விரவிய தன்முலை மேவிக்கீ ழங்கி
கருமுலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய கந்தர மேல்வெளி யாமே.

(ப. இ.) உடலைத் தாங்கும் உறுதியான பாதம் நிலம் ஆகும். பாதத்திலிருந்து கொப்பூழ்வரை நீராகும். கொப்பூழிலிருந்து மார்புவரை தீயாகும். மார்பிலிருந்து தோள்வரைக் காற்றாகும். கழுத்துக்கு மேல் வான வெளியாகும். இம்முறையாக உடம்பின்கண் ஐம்பெரும் பூதநிலை நிற்பன காண்க.

(அ. சி.) உரம் அடி மேதினி - உறுதியுள்ள திருவடி மண் தத்துவம் ஆம். உந்தியில் அப்பாம் - உந்திவரை நீர் தத்துவம். முலை மேவிய கீழ் அங்கி - மார்புவரை தீதத்துவம். கருமுலை மீமிசை கைக்கீழிற்கால் - கறுத்த முலைக்காம்பினின்று தோள்வரை கால் (காற்று) தத்துவம். கந்தர மேல்வெளி - கழுத்துக்குமேல் வெளி (ஆகாயம்) தத்துவம்.

(38)