ஆகிய இரண்டினையும்கேட்டுப் பிறப்புக்கே ஆளாகி வாளா இருப்பர். அக் குற்றமற்றவர் சிறப்புக்கு ஆளாகி அறப்பயன் சேர் பெரியராயிருப்பர். இருந்தார் : (குற்றமற்று) வாய்வாளா திருந்தார் என்றலும் ஒன்று. சிறப்பு - வீடுபேறு. (21) 178. புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல திரையற்ற சிந்தையுள் சிவனவன் செப்பும் உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால் கரையற்ற சோதி கலந்தசத்1 தாமே. (ப. இ.) அமிழ்து மோராகிய புரை கலவாத பாலினுள் நெய் மறைந்து வெளிப்படா திருப்பது போல் ஏனையார் உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் சிவபெருமான் பதைப்பாகிய அலையற்ற ஆருயிரின் தூய நெஞ்சத்தினுள் தயிரின் நெய்போல் வெளிப்பட்டருள்வன். அவன் சிவகுருவாய் வந்து அருளிச் செய்யும் திருவைந்தெழுத்தின் வழியே உரையற்று உணர்வோர் உடல் அருளால் இங்கு நீங்கும். நீங்கினால் எல்லையில்லாத திருவருள் ஒளியில் அவ்வுயிர் கலக்கும். கலந்து அழிந்து ஒன்றாகாமலும் கழிந்து இரண்டாகாமலும் உழந்துணர்ந்து அவ்வுண்மையோடு புணர்ந்து உண்மையாகவே நிற்கும். சத்து: நிலைத்தது; புக்கில்லாகிய திருவடிப் பேறு பெற்று வாழ்வது. உரை - பேச்சு. உணர்தல் - நினைதல். (அ. சி.) புரையற்ற பால் - புரை குத்தாத பால். உரையற்றுணர்வோர் - மவுன நிலையுற்றுச் சிவம் நினைவோர். (22) 179. சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ2 சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. (ப. இ.) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூதமுதலாகிய தன்மாத்திரைகள் ஐந்தும் ஒடுங்கும் முறையில் ஒன்றனுள் ஒன்றாய் முப்பத்தாறு மெய்யும் ஒடுங்கும். இவற்றாலாகிய உடம்பு உலகங்களில் வாழ்ந்தவுயிர் அறிவுடைய உள்பொருள். அவ்வுள் பொருளுக்கு உடற்சார்பு நீங்கினால் அவ்வுயிர்க்கு என்றும் அறிவு விளக்கும் உயிர்ச் சார்பாம் சித்தாகிய பேரறிவுடைய சிவமே நிலைத்த சார்பாகும். அஃதல்லாமல் சேரும் இடம் வேறில்லை. திருவருள் வெளியில் விளக்க விளங்கும் அறிவொளியாகிய உயிரும் தானே விளங்கும் பேரறிவொளியாகிய சிவனும் ஓரினச் சுடராகலின் ஒன்று சேரும். அத்தமாகிய மெய்ப்பொருட் சிவன் அப்பாகிய அருளாலே இதனைத் திருவுளங் கொண்டு ஆண்டு கொள்வன். தன்வழி - தன்மாத்திரையின் இனவழியாகிய மாயையில். (23)
1. புண்ணியமே. சிவஞானசித்தியார், 8. 2 - 21. 2. சிறை செய்ய. சிவஞானபோதம், 8. 4 - 1. " உறுகயி. அப்பர், 4. 27 - 6.
|