874
 

வும் விளங்கியருள்கின்றனன். அஃதாவது சிவன் உயிர்க்கு உயிராய் நிற்கும்போது அருவன் எனவும், உடலாய் நிற்கும்போது உருவன் எனவும் கூறப்படுவன். அவன் பொருள்தன்மையில் வேறாய் நிற்கும் போது அயற்புணர்வாய் நிற்பன். அயற்புணர்வு: சார்புப்புணர்வு. அப்பொழுது அவன் அறிவாகவும் அறிவிற் பின்னிய செறிவாகவும் விளங்குவன். செறிவு - நிறைவு. நாதன் ஆகிய சிவபெருமான், பேரறிவுப் பேராற்றலாகிய சத்தியுடன் கலந்து வெளிப்பட்டருள்வன். அவ்வாற்றலும் அவனையும் அவன் திருவுள்ளக் குறிப்பினையும் நயக்கும். அதனால் உலகமும் உலகத்துடன் ஒட்டிய உயிர்களும் ஓவாதியங்குகின்றன. அங்ஙனம் இல்லாவிட்டால் எல்லாம் இருள்மூடிக் கிடக்கும்.

(அ. சி.) இயற்பு - இயற்கை.

(24)

2171. சத்தி யிராகத்திற் றானல் லுயிராகி
ஒத்துறு பாச மலமைந்தோ டாறாறு
தத்துவ பேதஞ் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலமறு மாறே.

(ப. இ.) ஈசனாகிய சிவபெருமான் தன்னைவிட்டு நீங்காத பேரறிவுப் பேராற்றலாம் சத்தியின்கண் உலகியல் நிகழ்ச்சியின் பொருட்டு நீங்கா விருப்பம் தாங்கினன். இராகம் - விருப்பம். உயிர் உடலை இயக்குவது போன்று சிவனும் சிவையாகிய சத்தியை இயக்குகின்றனன். அந் நீர்மையினால் சிவனை உயிராகவும் சிவையை உடலாகவும் உயர்ந்தோர் உருவகிப்பர். அறிவோனாகிய சிவன் ஆற்றலளாகிய சிவையைத் தொழிற்படுத்துவன். அப்பொழுது உலகமுண்டாகி உயிர்கள் உய்யும். அதனால் ஆருயிர்கட்கு ஒட்டிய கட்டாகிய மலத்தை யகற்றுவதற்கு வினை, மாயை, மாயையாக்கம், நடப்பாற்றல் ஆகிய நான்கையும் சிவன் கூட்டியருள்வன். அப்பொழுது மலம் ஐந்தெனப்படும். மெய்கள் முப்பத்தாறு என்று சொல்லப்படும். இவையனைத்தையும் படைத்துக் கூட்டிக் காத்தருள்பவன் சிவன். அதனால் மலமகலும். கருவிகள்: மாயை ஆக்கமாகிய புறநிலைக் கருவிகள் அறுபது (2107)

(அ. சி.) இராகத்தில் - விருப்பினால். மயம் - மலம் (ஆணவம்).

(25)

2172. சாக்கிரா தீதத்தி லாணவந் தன்னுண்மை
சாக்கிரா தீதந் துரியத்திற் றானுறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடாச்
சாக்கிரா தீதம் பரனுண்மை தங்குமே.

(ப. இ.) அப்பால்நனவு என்னும் சாக்கிராதீதத்தில் ஆணவத்துடன் மட்டும் ஆருயிர் ஒட்டிநிற்கும் நிலை புலம்புநிலையாகிய தன் உண்மை நிலையாகும். அப்பால் நனவின் பேருறக்கம் சாக்கிராதீதத்துரியம். அதன்கண் ஆருயிர் தன்னிலையுணரும். இந் நிலைமை ஆணவம் அகலாத நிலைமையாகும். ஆணவம் நீங்கிய அப்பால்நனவின்கண் திருவருளால் திருவடியுணர்வாம் பரனுண்மை வெளிப்பட்டுத் தங்கும். இதுவே 'பாரிப்பா னொருவனென்று செவ்வையே உயிரிற்காணும் சிவரூபமாகும்'. (உண்மை நெறி விளக்கம் 3.)

(26)