883
 

வருளால் உணர்ந்து நீங்குதல் வேண்டும். நீங்குதல் என்பது இவை நமக்குத் துச்சில் போன்று துணைக்கருவியே அன்றி நிலைப்பொருள் அல்லவென்றுணர்தல். அப்படி நீங்கிய அளவில் குற்றமற்ற குணத்தனி நிலையாகும். தனிநிலை - கேவலம். தூய நிலை அல்லது புரிவு மலமாயை கன்மங்களின் குற்றம் முற்றும் அறுதல். அறவே மாசற்று நிற்கும் நிலை சுத்தநிலை. இங்ஙனம் கூறுவது இயற்கை உண்மைச் சைவம். இயற்கை உண்மைச்சைவம் எனினும் சுத்தசைவம் எனினும் ஒன்றே.

(3)

2190. ஆமுயிர் கேவல மாமாயை இன்னடந்து
ஆமுயிர் மாயை எறிப்ப 1அறிவுற்றுக்
காமிய மாயேய முங்கல வாநிற்பத்
தாமுறு பாசஞ் சகலத்த தாகுமே.

(ப. இ.) புலம்புநிலையிற் கிடந்த வுயிர் மாமாயையின்கண் உறையும். அவ் வுயிர் பின் முப்பத்தாறு மெய்களுடனும் கூடும். இம் மெய்களுடன் கூடியதும் 'மாயா தானுவிளக்காம்' என்ற முறைப்படி சிறிது அறிவு விளங்கும். அதனால் காமியமாகிய வினைகளும் மாயேயமாகிய கருவிகளும் உயிருடன் பொருந்தித் தொழிற்படும். இந் நிலையில் அவ்வுயிர் அக் கருவிகளினிடத்துப் பற்றுக் கொள்ளும். இந் நிலை புணர்வு நிலை என்ப. புணர்வு - சகலம்.

(அ. சி.) எறிப்ப - விளக்க.

(4)

2191. சகல அவத்தையிற் சார்ந்தோர் சகலர்
புகலு மலமூ வகையும் புணர்ந்தோர்
நிகரின் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்
நிகழ்நரர் கீட மந்தமு 2மாகுமே.

(ப. இ.) கருவிகளுடன் கூடிய புணர்வுநிலையிற் சார்ந்தோர் புணர்வினராவர். புணர்வினரெனினும் சகலர் எனினும் ஒன்றே. இவர்கள் மும்மலப்பிணிப்பினர். மும்மலமாவது ஆணவம், கன்மம், மாயை என்பன. மும்மலப்பிணிப்புடையார் யாவரெனின்? ஒப்பில்லாத அயன், மால் பல தேவர்கள், இவ்வுலகில் வாழும் மக்கள் முதலாகப் புழு ஈறாகச் சொல்லப்படும் அனைத்துயிர்களும் என்க. புழுவுக்குரிய குணங்கள் நான்கு. அவை அருந்தல் பொருந்தல் அனந்தல் அச்சம் என்பன. இவற்றை உண்டல் உடனுறைதல் உறங்கல் உட்குதல் எனவும் கூறுப. உட்குதல் - இறப்பு நேருமே என்று அஞ்சுதல். இந் நான்கு குணங்களும் மால் உள்ளிட்ட தேவர்களுக்கும் உளவாயின் அத் தேவர் எவ்வகையில் உயர்ந்தோராவர்? அவர் வாழ்வு எங்ஙனம் உயர்ந்ததாகும்? சிவனெறி கல்லார் அவர் வயப்பட்டு அவநெறி செல்வர். அனந்தல் - உறங்கல்.

(5)


1. மாயாதனு. சிவஞானபோதம், 4. 2 - 1.

2. புழுவுக். அப்பர், 5. 91 - 4.

" அண்டர். " 5. 39 - 3.

" நூறு. " " 100 - 3.

" உரைதருமிப். சிவஞானசித்தியார், 8. 1 - 1.