கூறுப. இவ் வொன்பதினையும் பொருந்தி ஆருயிர் தூய்மைப்படும் நிலை திருவருளைப் பொருந்தி யுணர்வார்க்குத் தெற்றெனப் புலனாம். (அ. சி.) கேவலம் ஆதி - கேவலம், சகலம், சுத்தம். கேவல . . . . . . சகலத்து - சகலாவத்தையிலும். மூன்று உள - சகல சகலம், சகல கேவலம், சகல சுத்தம். இவ்வாறே மூன்றுக்கும் கொள்ள அவத்தைகள் ஒன்பதாகும். (24) 2211. கேவலத்திற் கேவலம் அதீதா தீதங் கேவலத் திற்சக லங்கள் வயிந்தவங் கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்க்கு ஆவயி னாதன் அருண்மூர்த்தி தானாமே. (ப. இ.) கேவலத்திற் கேவலம் எனப்படும் தூய புலம்பு அப்பாலைக்கு அப்பாலாம். அப் புலம்பிற் புணர்வு தூமாயை நிலைக்களம். அப் புலம்பிற் புரிவு குற்றமற்ற பேருணர்வாகிய விஞ்ஞானம். இந்நிலை ஒருமலத்தராகிய விஞ்ஞானாகலர் நிலை என்ப. அவ்விடத்து அவ் வுயிர் நாதனாகிய சிவபெருமான் விளங்கும் சீர்த்தவ உடம்பாகும். வயிந்தவம் - சுத்தமாயை. (அ. சி.) அதீதாதீதம் - அதீதத்திற்கும் அப்பாற்பட்டது. வயிந்தவம் - சுத்த மாயை. (25) 2212. சகலத்திற் கேவலஞ் சாக்கிரா தீதஞ் சகல சகலமே சாக்கிர சாக்கிரஞ் சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை சகலத்தில் இம்மூன்று தன்மையு மாமே. (ப. இ.) புணர்விற் புலம்பு நனவின் அப்பாலாகும். புணர்விற் புணர்வு நனவிற் கனவாகும். புணர்விற் புரிவு ஆருயிர் அருளுடன் கூடி நிற்கும் நிலை. தூய புணர்வின்கண் இம் மூன்று நிலையும் காண்க. பராவத்தை - அருள்நிலை. (அ. சி.) உபசாந்தம் - ஓய்வுபெற்றிருத்தல். (26) 2213. சுத்தத்திற் சுத்தமே தொல்சிவ மாகுதல் சுத்தத்திற் கேவலந் தொல்லுப சாந்தமாஞ் சுத்த சகலந் துரிய விலாசமாஞ் சுத்தத்தில் இம்மூன்றுஞ் சொல்லலு 1மாமே. (ப. இ.) தூய புரிவிற் புரிவு ஆருயிர் தொன்மையும், முன்மையும், நன்மையும், உண்மையும், அறிவும், இன்பமும் ஒருங்கமைந்த தென்னாடுடைய சிவன் திருவுருவெய்தல். புரிவிற் புலம்பு தற்பணியறுதலாகிய தவ ஒடுக்கம். புரிவிற் புணர்வு இன்பினில் மூழ்கும் இனிய உறைவிடமாம் துரியவிலாசம். தூய துரியம் - இன்ப நிலையம். (27)
1. முத்திநெறி, 8. அச்சோப்பதிகம் - 1. " சங்கந், 8. திருக்கோவையார், 85.
|