928
 

2289. சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கூடிச்
சித்தும் அசித்துஞ் சிவசித்த தாய்நிற்குஞ்
சுத்தம் அசுத்தந் தொடங்காத் துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல்லற் 1றவர்களே.

(ப. இ.) ஆருயிர்க்கு நிலைப்பு நிலையாமை என்னும் இருபெயர் உண்டு. இதனைச் சதசத்து என்ப. இதனைச் சார்பி எனலும் ஒன்று. சத்தாகிய திரிபில் மெய்பொருளாம் சிவத்துடன் கூடுதற்கு உரிமையுடையதாதலால் சத்தென்னும் பெயர் உயிர்க்கு உண்டு. அதுபோல் திரிபினை எய்தும் மெய்ப்பொருளாம் மாயையுடன் கூடுதலால் அசத்தென்னும் பெயரும் உயிர்க்கு உண்டு. அசத்து: சத்தின் - உண்மையின் எதிர்மறையன்று. சத்துப்போன்று என்றும் திரிபின்றி ஒன்றுபோலிருக்கும் தன்மை அல்லாதது என்பது பொருள். கூட்டுப் பெயரியாகிய தான் சத்துடன் கூடிச் சத்தாகநிற்கும் அசத்துடன் கூடி அசத்தாக நிற்கும். அதுபோல் அவ் ஆருயிர் முற்றுணர்வாகிய சிவத்துடனும் நிற்கும். சற்றும் உணர்வில்லாத மாயை ஆக்கத்துடனும் மாயையுடனும் வினைமலங்களுடனும் நலம்பெற முயலக் கூடிநிற்கும். அதனால் சிவசித்தென்னும் பெயரும் உண்டாயிற்று. அறிவு அறியாமையாகிய இரண்டும் தொடங்காத பேருறக்கத்தும், ஆருயிர் தூயதாய் இருக்கும். அதுபோல் உறக்கம் கனவு நனவு என்ன மூன்றிலும் தூயதாகவே இருக்கும்.

(25)

2290. தானே யறியான் அறிவிலோன் தானல்லன்
தானே யறிவான் அறிவு சதசத்தென்று
ஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

(ப. இ.) ஆருயிர்கள் தாமாக அறியமாட்டா. அறிவில்லாத தன்மையுடையனவல்ல. அறிவித்தால் அறியும் தன்மையுடையன. அதனால் தானே யறியான் அறிவில்லோனும் தானல்லன் என்றருளினர். அவ் வுயிரின் அறிவு சதசத்தென்னும் உண்மையை அருளால் அறிந்தால் அவ் வுயிரி தானே அறிவான். இவ் விருநிலையும் சிவபெருமான் திருவருளால் எய்தும். அதனால் அவ் வருளில் கலந்து அருளாய் நிற்பன். நிற்கவே தானே யறிந்து சிவத்துடன் புணர்ந்த அவன் திருவடியில் ஒருவாதுறைந்து பெருவாழ்வுற்றுப் பேரின்பம் துய்ப்பன். உயிரி - உயிர்க்கிழவன்; ஆன்மா.

(26)

2291. தத்துவ ஞானந் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானந் தலைப்பட லாய்நிற்குந்
தத்துவ ஞானத்துத் தானவ னாகவே
தத்துவ ஞானானந் தந்தான் 2தொடங்குமே.


1. சத்தசத். சிவஞானசித்தியார், 7. 3 - 1.

" அறியாமை. தாயுமானார், உடல் பொய்யுற - 22.

2. கண்டவிவை. சிவஞானசித்தியார், 9. 3 - 1.

" தத்துவந்தலை. அப்பர், 5. 46 - 7.