(ப. இ.) தொன்மை நிலையாகிய சிவபெருமான் யாண்டும் கலந்து நிற்கும் நிலையினைப் பலவாகக் கூறுதல் உண்டு. அவற்றுள் இதுவும் ஒன்று. அம் முறை விசுவன் முதலாகச் சாந்தன் ஈறாகக் கூறப்படும் நிலை ஒன்பதும் என்ப. அவை வருமாறு: 1. விசுவன் - உலகவுருவினன். 2. தைசதன் - தழல் வண்ணன். 3. பிராஞ்ஞன் - பேரறிவினன். 4. விராட்டன் - உலகமுதல்வன். 5. பொன்கர்ப்பன் - பொன்மேனியன். 6. அவ்யாகிர்தன் - பிரிக்கப்படாதவன். 7. இதையன் - கலப்பையன். 8. பிரசாபத்தியன் -ஆருயிர் முதல்வன். 9. சாந்தன்- தண்ணளியோன். இந் நிலைகள் ஒன்பதும் பொருந்திய பொருவில் பற்று நிலைகளாகும். (1) 2498. நவமா மவத்தை நனவாதி பற்றிற் பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவில் துவமார் துரியஞ் சொரூபம தாமே. (ப. இ.) மூவகையாம் அவத்தைகள் மும்மூன்றாய் ஒன்பதென்ப. அவை, ஆருயிரின் நனவாதி மூன்றும், ஆரருளின் நனவாதி மூன்றும் பேருயிரின் நனவாதி மூன்றும் என ஒன்பதாகும். இவற்றைச் சீவசாக்கிரம், பரசாக்கிரம், சிவசாக்கிரம் முதலாகச் சொல்லுவர். ஆருயிர் நனவு, ஆருயிர்க் கனவு, ஆருயிர் உறக்கம் என மூன்று. ஆரருள் நனவு, ஆரருள் கனவு, ஆரருள் உறக்கம் என மூன்று. பேருயிர் நனவு, பேருயிர்க் கனவு, பேருயிர் உறக்கம் என மூன்று. பிறப்பிற்கு வாயிலாகிய மலம் குணம் முதலியவற்றின் பற்றையறுத்துப் பற்றுதற்கரிய நன்னெறி நான்மை நற்றவமான உண்மை அறிவு இன்ப வடிவாம் ஐம்பெருமன்றாம் பொருவிலாப் பொதுவில் மேன்மைமிக்க செயலறு நிலையாம் துரியம் உணர்விற்கு உணர்வாம் உண்மை நிலையாகும். சொரூபம் - இயற்கை உண்மை. (அ. சி.) நவமாமவத்தை - நவ அவத்தை, ஒன்பது அவத்தைகள். நனவு, கனவு, சுழுத்தியை; சீவன், பரம், சிவன் மூன்றுக்கும் சேர்த்த ஒன்பது ஆதல் காண்க. பவமாம் - பிறப்பு உண்டாம். பற்றா - பற்றுதற்கரிய. துவமார் - மேன்மைபொருந்திய. (2) 2499. சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதந் தவமா மவையாகித் தானல்ல வாமே. (ப. இ.) திருவருளால் சிவனையே இடையறாது நாடுவார் சிந்தையின்கண் சிவனுறைவன்; என்னை, "சிந்திப்பார் மனத்தான் சிவன்" எனவும், "சிந்திப் பரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன" எனவும் செந்தமிழ்த் திருமாமறை சிறந்தெடுத்து ஓதுதலான் என்க. ஆருயிரின் முனைப்புத்தன்மை யகன்று பேருயிர்க்கு அடிமையாம் நினைப்புத் தன்னை இடையறாது சிந்தித்தலால் கைவரும். வரவே ஆருயிர் முனைப்புத் தன்மை அகலும் பிறப்பிற்கு வாயிலாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமும் முற்றும் அற்று ஒழியும். ஒழியவே மேல் (2498)ஒன்பது
|