1094
 

6. சூக்கும பஞ்சாக்கரம்(நுண்மை ஐந்தெழுத்து)

2659. எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை
ஒளியை யுன்னி யுருகு மனத்தராய்த்
தெளிய வோதிச் சிவாய நமவென்னுங்
குளிகை யிட்டுப்பொன் னாக்குவன் 1கூட்டையே.

(ப. இ.) எங்கள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை உண்மை உணர்விலாதவர் எளியானாகக் கருதிச் சொற்போர் செய்வர். அவர் 'சூதும் வாதும் வேதனை செய்யும்' என்னும் ஒழுகலாற்றுமுறையினை முற்றும் மறந்தோராவர். சொற்போர் - வாது. அவன் எல்லா ஒளிக்கும் ஒளி கொடுத்துக்கொண்டு தான் இயல்பாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் அறிவுப் பேரொளியாவன். அவனைப் பேரன்புடன்நினைத்து இடையறாது உருகு மனத்தராய் இருப்பவர் சிவனடியாராவர். அவர் சிவகுருவின் திருவருளால் தெளிந்து 'சிவயநம' என்னும் நுண்மைத் திருவைந்தெழுத்தை இடையறாது கணிப்பர். அங்ஙனம் கணித்தலால் சிவபெருமான் அப்பொருண் மறையினையே நற்குளிகையாகக்கொண்டு அவ்வுயிரையும் அவ்வுயிரின் உடம்பினையும் மாற்றுயர்ந்த செம்பொன்னாம் வண்ணம் செய்தருள்வன். அஃதாவது அவ்வுயிரையும் உடம்பினையும் சிவமாக்கியருளல். இவ்வுண்மை ஆளுடைய நம்பியார் திருவுடம்பினையும் சண்டீசநாயனார் திரு வுடம்பினையும் முறையே 'ஊனுடம்பு வேறு செய்தான்' எனவும், 'சூழ்ந்த ஒளியில் தோன்றினார்' எனவும் கூறுமாறு செய்தருளினமையால் விளங்கும். குளிகை: செம்பைப் பொன்னாக்கும் சீரிய கருவி. 'சிவயநம' என (2550) நோன்பு நெறியில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய நுண்மறை.

(அ. சி.) பொன்னாக்குவன் கூட்டை - உடம்பு பொன்போல் ஒளி வீசும். குளிகை - மந்திரம்.

(1)

2660. சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலமைந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே.

(ப. இ.) செந்தமிழ்த் திருவைந்தெழுத்துச் செம்பொருள் ஐந்தினையும் இம்மையே அறிவிக்கும் செம்மை மறையாகும். அவ்வைந்தெழுத்தும் தனித்தனியே ஒவ்வொரு பொருளையுணர்த்தும் ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்தாகும். அவை முறையே 'சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு' எனப்படும். இவற்றை முறையே சிவன், சத்தி, சீவன், திரோதாயமலம்' என்ப. மலத்தைச் செறுமலம். மாயை எனவுங் கூறுப.


1. தானெனை. நம்பி, 7. 100 - 1.

" செங்கண். 12. சண்டேசுரர், 55.

" செம்பிரத. சித்தியார், 11. 2-2.

" அல்ல. அப்பர், 5. 43 - 9.